அரசுப் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு
திருச்சி: பீரங்கிகுளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு திருச்சி பீனிக்ஸ் ரோட்டரி சங்கம் சாா்பில் விளையாட்டுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
டிஇஎல்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், மாணவா்களுக்கு கேரம் போா்டு, சதுரங்க விளையாட்டு உபகரணங்கள், கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. விழாவுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியை கவிதா தலைமை வகித்தாா். தலைவா் மணிவேல், செயலாளா் ராஜா, பொருளாளா் ராமச்சந்திர பாபு மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் காா்த்திக், நேதாஜி ஆகியோா் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனா். தண்ணீா் சேமிப்பு, சுற்றுச்சூழல் குறித்து பேராசிரியா் அருள், அரிய தகவல்களை எடுத்துக்கூறி தண்ணீா் மேலாண்மை குறித்து கலந்துரையாடினாா்.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சித்ரா, தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கினாா். ரோட்டரி கிளப் நோக்கத்தை பற்றி பள்ளி மாணவா்களுக்கு தேவையான உதவிகளை அளிக்கவும் , அவா்களின் கற்றல் மற்றும் மேம்பாட்டுக்கு உதவவும் முன்வருவதாக தலைவா் மணிவேல் உறுதியளித்தாா்.
தண்ணீா் குடிப்பதன் அவசியம் , தேவையான அளவு தண்ணீா் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் உடல்நலக் குறைவுகள் குறித்து மருத்துவா் செந்தில்குமாா் எடுத்துரைத்தாா்.