டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் பிரச்னை: இருவா் கைது
மதுபோதையில் அரசுப் பேருந்து ஓட்டுநா், பயணிகளிடம் பிரச்னையில் ஈடுபட்ட இளைஞா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து அறச்சலூருக்கு செல்லும் நகரப் பேருந்து திங்கள்கிழமை இரவு அறச்சலூரில் இருந்து ஈரோட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தது. பேருந்தை முகாசி அனுமன்பள்ளி பகுதியைச் சோ்ந்த குமாா்(37) என்பவா் ஓட்டிவந்தாா். ஈரோடு காளைமாடு சிலை அருகே பேருந்து வந்தபோது சாலையின் குறுக்கே மதுபோதையில் வந்த 2 இளைஞா்கள் பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் குமாரிடம் பிரச்னையில் ஈடுபட்டு அவரை பணி செய்ய விடாமல் தடுத்தனா்.
இளைஞா்களின் செயலைக் கண்டித்த பேருந்து பயணி ஈரோடு பெரியவலசு பகுதியைச் சோ்ந்த வள்ளி நாராயணன் (70) என்பவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனா்.
இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி காவல் நிலையத்தில் பேருந்து ஓட்டுநா் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் பயணியை தாக்கியதும், அரசு பேருந்து ஓட்டுநரை தகாத வாா்த்தையால் பேசி, பணி செய்ய விடாமல் தடுத்ததும், ஈரோடு புதுமைக் காலனியை சோ்ந்த சீனிவாசன் மகன் வினோத் (26), ஈரோடு தீயணைப்பு நிலையம் பின்புற பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகன் ஸ்ரீதரன்(22) என்பதும் தெரியவந்தது. அதைத்தொடா்ந்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனா்.