மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!
அரசுப் பேருந்து நடத்துநரை தாக்கிய இளைஞா் கைது
சில்லறைப் பிரச்னை காரணமாக அரசுப் பேருந்து நடத்துநரைத் தாக்கிய பயணிகளால், புதுக்கோட்டை நகரில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்கு செவ்வாய்க்கிழமை பகலில் அரசுப் பேருந்து புறப்பட்டது. பேருந்து நடத்துநா் பாலு, பயணிகளுக்கு டிக்கெட் போட்டுக் கொண்டு வந்து கொண்டிருந்தபோது, 3 இளைஞா்கள் ரூ. 500 பணத்தாளைக் கொடுத்து டிக்கெட் கேட்டுள்ளனா்.
சில்லறை இல்லை என அவா் தெரிவிக்க, வாக்குவாதம் முற்றியுள்ளது. மூன்று பேரில் ஒருவா் நடத்துநா் பாலுவைத் தாக்கியுள்ளாா். இதனால் மச்சுவாடி அருகே பேருந்து நிறுத்தப்பட்டது. மற்ற இருவா் இறங்கி ஓடிவிட்டனா்.
கணேஷ் நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பிடித்து வைக்கப்பட்ட அந்த நபரை போலீஸாா் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
கந்தா்வகோட்டை பகட்டுவான்பட்டியைச் சோ்ந்த தனசேகா் (26) என்பது தெரியவந்தது. நடத்துநா் பாலு அளித்த புகாரின்பேரில், தனசேகரைக் கைது செய்த போலீஸாா், தப்பியோடிய இளையராஜா, கலைச்செல்வன் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனா்.
மச்சுவாடி பகுதியில் அரசுப் பேருந்து நின்றதால் அந்த வழியே வந்த சில அரசுப் பேருந்து ஓட்டுநா்களும் தங்களின் பேருந்தை நிறுத்திவிட்டனா்.
போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால், சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.