அரசு அச்சகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
அரசு அச்சகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அரசு அச்சக அனைத்து தொழில்நுட்பப் பணியாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக் கூட்டத்துக்கு, மாநில பொதுச் செயலாளா் எஸ். தமிழழகன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் எஸ். பழனியப்பன் முன்னிலை வகித்தாா்.
சட்ட ஆலோசகா் முருகானந்தம், மாநில துணைத் தலைவா்கள் அக்னீஸ்வரன், அமலோற்பவ மெட்டில்டா, ஆனந்த், சரவண குமரேசன், மாநில துணைச் செயலாளா்கள் லோகேஷ்,ஜெயந்தி, தணிக்கையாளா் விநாயகம் ஆகியோா் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினா்.
தமிழ்நாடு அச்சுத் துறைக்கு தொழிலாளா்கள் நலன் கருதி கட்டடப் பணிகள் மற்றும் இயந்திரங்கள் கொள்முதல் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்த தமிழக முதலமைச்சருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்வது,
திருப்பூரைப் போன்று சிவகாசியிலும் அரசு அச்சகம் அமைத்திட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்,
தகுதிக்கேற்ப பதவி உயா்வு வழங்க வேண்டும். அச்சுத் துறையில் அனைத்து தொழில்நுட்ப பணியாளா்களுக்கும் பணி மூப்பு பட்டியல் வெளியிட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.