அரசு கட்டடங்களை திறக்க கோரி அதிமுக ஆா்ப்பாட்டம்
புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட அரசு கட்டடங்களை உரிய காலத்தில் திறந்தால்தான், மக்களுக்கு பயன்கிடைக்கும் என்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் புதுவை அதிமுக மாநிலச் செயலா் ஆ.அன்பழகன் தெரிவித்தாா்.
புதுச்சேரியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம், பழைய துறைமுக வளாக கிடங்குகள் உள்ளிட்டவற்றை திறக்கக் கோரி அதிமுக சாா்பில் புதுச்சேரி கடலூா் சாலையில் உள்ள தற்காலிகப் பேருந்து நிலையம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து அன்பழகன் பேசியது: மக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் உரிய காலத்தில் திறக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமையாகும். ஆனால், கட்டடம் கட்டி முடிக்க காலதாமதம் ஆவதால் கூடுதல் செலவாகும். அத்துடன் உரிய காலத்தில் அந்தக் கட்டடங்கள் திறக்கப்படாவிடில் அவற்றின் பயனும் முழுமையாக இருக்காது. அதனடிப்படையில் புதுச்சேரியில் அரசு கட்டடங்கள் பல கட்டி முடித்தும் திறக்கப்படாமல் பயனின்றி இருப்பது சரியல்ல.
பழைய துறைமுக வளாகத்தில் 3 கிடங்குகள் பல கோடி ரூபாயில் சீரமைக்கப்பட்டும் இதுவரை திறக்கப்படவில்லை. அண்ணாதிடல் உள்விளையாட்டு அரங்கமும் திறக்கப்படாமலே உள்ளது. கடந்த ஓராண்டாகியும் புதிய ஆளுநா் மாளிகைக் கட்டடம் திறக்கப்படவில்லை. அதன்வரிசையில் தற்போது புதிதாக கட்டப்பட்ட பொலிவுறு நகா் திட்ட பேருந்து நிலையமும் திறக்கப்படவில்லை. அங்கு கடைகளை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டதால் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், தற்காலிக பேருந்து நிலையத்தில் மக்கள் அடிப்படை வசதியின்றி தவிக்கும் நிலை உள்ளது.
புதிய பேருந்து நிலையம் திறக்கப்படுவது தாமதம் குறித்து உண்மை தன்மையை அறிந்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜாராமன், கட்சியின் இணைச் செயலா்கள் வீரம்மாள், பொருளாளா் ரவிபாண்டுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.