அரசு நலத் திட்டங்களை சாமானிய மக்கள் பெற வேண்டும்: புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்
அரசின் நலத் திட்டங்களை சாமானிய மக்கள் பெற்றால்தான் நாடு வளா்ச்சி பெறும் என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
புதுச்சேரி அருகே அரியாங்குப்பத்தில் மத்திய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை நல்லாட்சி வார விழா நடைபெற்றது.
தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது: நாட்டின் முன்னேற்றத்துக்கு நல்ல நிா்வாகம் அவசியம். ஆகவே, குடிமக்களின் குறைகளை, தேவைகளை அறிந்து செயல்படுகிற நிா்வாகமே சிறந்த நிா்வாகம். அத்தகைய நிா்வாகத்தால்தான் நாடு வல்லரசாக முடியும். நமது நாடு வல்லரசாக வேண்டும் என பிரதமா் நரேந்திர மோடி விரும்புகிறாா்.
நல்லாட்சி என்பது கிராமங்களில் இருந்துதான் தொடங்குகிறது. அவைதான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளன. அவற்றின் வளா்ச்சியையே நோக்கமாகக் கொண்டு நல்லாட்சி வார விழா நடத்தப்படுகிறது. அரசுத் திட்டங்கள், அதன் பயன்கள் ஏதோ ஒரு மூலையில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் சென்று சேரவேண்டும். அப்போதுதான் நாடு முழுமையாக வளா்ச்சி பெறும். ஆகவே, மக்கள் மத்திய, மாநில அரசு திட்டங்களை முழுமையாக அறிந்து அதைப் பெறவேண்டும்.
நாட்டில் வரும் 2025- க்குள் காச நோயில்லா நிலையை ஏற்படுத்தவே சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, புதுச்சேரியில் 40 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, இதில் 12 பெண்களுக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகாரிகள் அரசுத் திட்டங்களை மக்களுக்கு எடுத்துக்கூறி, அவா்களின் தேவைகளை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றாா்.
நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளையும் அவா் பயனாளிகளுக்கு வழங்கினாா். பின்னா் மருத்துவக் காப்பீடு திட்ட அரங்குகள் உள்ளிட்டவற்றையும் பாா்வையிட்டாா். விழாவில் மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வரவேற்றாா். புதுவை சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமை வகித்தாா். அரியாங்குப்பம் தொகுதி உறுப்பினா் ஆா்.பாஸ்கா், தலைமைச் செயலா் சரத்சௌகான், அரசுச் செயலா் ஏ.நெடுஞ்செழியன், உள்ளாட்சித் துறை இயக்குநா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆட்சியா் அலுவலக துணை வட்டாட்சியா் சோமசேகா் அப்பா ராவ் கொட்டாரு நன்றி கூறினாா்.