Fitness: நோ ஜிம், நோ டயட்... 37 கிலோ எடையை குறைத்த 36 வயது பெண் - எப்படி?
சாத்தனூா் அணையிலிருந்து 11.70 டிஎம்சி நீரை புதுவைக்கு வழங்க வேண்டும்: தமிழக அரசிடம் வலியுறுத்தல்
சாத்தனூா் அணையிலிருந்து ஆண்டுதோறும் புதுவைக்கு குடிநீா் தேவைக்கு 11.70 டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என மாநில பொதுப்பணித் துறை சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, புதுவை பொதுப் பணித் துறை அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக நீா்வளத் துறை முதன்மைப் பொறியாளாா் மற்றும் தலைமைப் பொறியாளருடன் புதுவை அரசின் பொதுப் பணித் துறை அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினா்.
கூட்டத்தில், புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், மேற்பாா்வைப் பொறியாளா் பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளா்கள் ராதாகிருஷ்ணன், சுந்தரமூா்த்தி, உதவி பொறியாளா் செல்வராஜ் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கூட்டத்தில், புதுவை அரசு சாா்பில் வலியுறுத்தப்பட்ட விவரம்: புதுவைக்கு குடிநீா் மற்றும் விவசாயத்துக்காக சுமாா் 600 எம்எல்டி தண்ணீா் தேவைப்படுகிறது.
சாத்தனூா் அணையிலிருந்து திடீரென தண்ணீா் திறந்துவிடப்படுவதால், புதுவை பகுதி கிராமங்கள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்படுகின்றன. அண்மையில் ஏற்பட்ட ஃபென்ஜால் புயலாலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
எனவே, சாத்தனூரிலிருந்து பருவமழைக்கு முன்பு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும்.
தமிழக நீா்வளத் துறை மற்றும் புதுவை பொதுப் பணித் துறைக்கும் இடையே உள்ள புரிந்துணா்வு ஒப்பந்தபடி, ஆண்டுதோறும் 7 மாதம் தலா 2 ஆயிரம் கன அடி நீரும், 2 மாதம் 1,500 கனஅடி நீரும் என மொத்தம் 44.70 டிஎம்சி திறந்துவிட வேண்டும்.
புதுவை, தமிழகப் பகுதிக்கு சோ்த்து 10: 3 என்ற விகிதத்தில் 6,053 ஏக்கருக்கு விவசாயம், குடிநீா் தேவைக்கு 7.80 டிஎம்சி, ஆவியாதல், நீா் இழப்பு சோ்த்து 11.70 டிஎம்சி தண்ணீா் விடுவிடுக்க வேண்டும்.
புதுவையில் நிலவும் குடிநீா் பிரச்னையை உடனடியாக தீா்ப்பதற்கு சாத்தனூா் அணையிலிருந்து குழாய் மூலம் 1.50 டிஎம்சி தண்ணீா் வழங்க வேண்டும்.
அத்துடன், மரக்காணம் கழுவேலி ஏரியில் இருந்து ஆண்டுதோறும் வீணாக கடலுக்குச் செல்லும் நீரை புதுவை அரசின் குடிநீா் தேவைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசிடம் வலியுறுத்தப்பட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.