Manmohan Singh: மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு... அரசு நிகழ்ச...
உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்!
ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா மீதான அழுத்தத்தை அறிமுக வீரர் சாம் கொன்ஸ்டாஸ் போக்கியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சாம் கொன்ஸ்டாஸ் (60 ரன்கள்), உஸ்மான் கவாஜா (57 ரன்கள்), மார்னஸ் லபுஷேன் (72 ரன்கள்) எடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் 68 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இதையும் படிக்க: வீரேந்திர சேவாக்கை நினைவூட்டிய சாம் கொன்ஸ்டாஸ்; முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் புகழாரம்!
அழுத்தத்தை போக்கிய சாம் கொன்ஸ்டாஸ்
இந்தியாவுக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளில் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறிய தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா, இன்றையப் போட்டியில் அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்குத் திரும்பினார்.
டேவிட் வார்னருக்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கப்பட்ட நாதன் மெக்ஸ்வீனி தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்த, அனுபவம் வாய்ந்த தொடக்க ஆட்டக்காரரான உஸ்மான் கவாஜாவும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறினார். பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடிக்க, உஸ்மான் கவாஜாவின் மீதான அழுத்தம் குறைந்து அவர் நன்றாக விளையாடினார்.
இதையும் படிக்க: பாக்ஸிங் டே டெஸ்ட்டில் புதிய சாதனை!
இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது: ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய சாம் கொன்ஸ்டாஸ், உஸ்மான் கவாஜாவின் மீதான அழுத்தத்தை நீக்கினார். டேவிட் வார்னருடன் எப்படி விளையாடுவாரோ அதே போன்று கவாஜா எந்த ஒரு அழுத்தமுமின்றி சாம் கொன்ஸாஸுடன் இணைந்து விளையாடியதைப் பார்க்க முடிந்தது என்றார்.