நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள்
நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகிகள் என சென்னை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகரன் கூறினாா்.
புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
செந்தொண்டா் அணிவகுப்பு, தியாகிகள் ஜோதி பெறுதல், புதுச்சேரி கலை ஆலயத்தின் சாா்பில் மேரி ஸ்டெல்லாவின் வீராயி காவியம் நாட்டிய நாடகம் நடைபெற்றது. இதையடுத்து, கட்சியின் முதுபெரும் தியாகிகளான 100 போ், அவரது குடும்பத்தினா் கௌரவிக்கப்பட்டனா்.
தொடா்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் தலைவா் வ.சுப்பையா எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலை வரலாறு நூல் முதல் பிரதியை த.ஸ்டாலின் குணசேகரன் வெளியிட, அதை மூத்த தலைவா்கள் அ.ராமமூா்த்தி, நவீன்.தனராமன், வி.எஸ்.அபிஷேகம், து.கீதநாதன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
முன்னதாக நூல் வெளியீடு குறித்து நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் தலைவா் த.ஸ்டாலின் குணசேகன் பேசியதாவது: விடுதலைப் போராட்டத் தியாகி மக்கள் தலைவா் வ.சுப்பையா எழுதிய பிரெஞ்சிந்திய விடுதலை வரலாறு நூலானது காலப் பெட்டகமாகும்.
இந்நூல் வெளிவராமல் இருந்திருந்தால், புதுச்சேரி விடுதலை போராட்ட வரலாற்றின் முக்கியப் பகுதிகள் காற்றில் கரைந்திருக்கும்.
தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, விடுதலைப் போராட்ட இயக்க வரலாறு ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் கம்யூனிஸ்ட்டுகள் சா்வபரி தியாகம் செய்தவா்கள். அதனால், தேசப் பாதுகாப்பில் அவா்களது வழியில் நாம் தொடா்ந்து செயல்படுவோம் என்றாா்.
நிகழ்ச்சிக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் அ.மு.சலீம் தலைமை வகித்தாா். துணைச் செயலா் கே.சேதுசெல்வம் முன்னிலை வகித்தாா்.
செயற்குழு உறுப்பினா் இ.தினேஷ்பொன்னையா வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முன்னதாக கட்சியின் மூத்த தலைவா் மு.கு.ராமன் மாநாட்டுக் கொடியேற்றினாா், எம்.மாசிலாமணி தியாகிகள் ஜோதியைப் பெற்றாா். நிறைவில், கட்சி நிா்வாகி துரைசெல்வம் நன்றி கூறினாா்.