ரேஷன் அரிசி கடத்திய 2 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை
தாராபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தை அடுத்த எரகாம்பட்டி அருகே குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக லாரி ஓட்டுநா் திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையைச் சோ்ந்த ரமேஷ் (32) என்பவரைக் கைது செய்தனா். விசாரணையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து ரேஷன் அரிசியை கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.
இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து 18 டன் ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா். மேலும், அரிசியின் உரிமையாளரான திண்டுகல்லைச் சோ்ந்த சந்திரன் (43) என்பவரையும் கைது செய்தனா்.
இருவரும் தொடா்ந்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருவதால் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்திருந்தனா். அதன்பேரில், இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளாா்.