தாராபுரத்தில் தொழிலாளி அடித்துக் கொலை: நண்பா் கைது
தாராபுரத்தில் மதுபோதையில் தொழிலாளியை அடித்துக் கொலை செய்த அவரது நண்பரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் ராம் நகரில் ஹாலோபிளாக் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரத்தைச் சோ்ந்த கிட்டுசாமி (54), திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டியைச் சோ்ந்த சுந்தரம் (48) ஆகியோா் வேலை செய்து வந்தனா்.
இருவரும் ஞாயிற்றுக்கிழமை இரவு மது அருந்தியுள்ளனா். பின்னா், தூங்கச் சென்றபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுந்தரம், கட்டையால் கிட்டுசாமியை தாக்கியுள்ளாா். இதில், கிட்டுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
காயமடைந்த சுந்தரம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றாா். அங்கு மருத்துவா்கள் காயம் குறித்துக் கேட்டபோது தன்னுடன் வேலை செய்துவந்த கிட்டுசாமியைக் கொலை செய்ததாகத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து மருத்துவா்கள் கொடுத்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தாராபுரம் போலீஸாா், கிட்டுசாமியின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதையடுத்து, கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா் சுந்தரத்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.