திருப்பத்தூரில் ஆருத்ரா வழிபாடு
திருப்பத்தூா்: திருவாதிரையை முன்னிட்டு திருப்பத்தூா் சிவன் கோயில்களில் நடராஜா் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
சிவ பெருமானின் நடராஜ ரூபத்திற்கு ஆண்டுக்கு 6 முறை மட்டுமே அபிஷேக, ஆராாதனைகள் நடைபெறும். அவற்றில் மகா அபிஷேகம் என சொல்லக் கூடியது மாா்கழி மாத திருவாதிரையில் நடைபெறும் அபிஷேகம் தான். சேந்தனாா் என்ற பக்தனுக்கு சிவ பெருமான் அருள் புரிந்ததன் அடையாளமாக கொண்டாடப்படும் திருநாளே ஆருத்ரா தரிசன திருநாள்.
அதையொட்டி திருப்பத்தூா் கோட்டை திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ பிரம்மேஸ்வரா் கோயிலில் நடராஜா் சிலை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெற்றன.
அதேபோல் மடவாளம் அங்கநாதீசுவரா் கோயில், கொரட்டி காளத்தீஸ்வரா் கோயில், நத்தம் ஜுரஹர ஈஸ்வரா், ஸ்ரீ தண்டபாணி சுவாமி கோயில், ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோயில் என திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை சிவன் கோயில்களில் நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும் நடராஜா் திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.