கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் ஆருத்ரா தரிசனம்
கோவில்பட்டி, கழுகுமலை கோயில்களில் திருவாதிரைத் திருவிழாவை முன்னிட்டு ஆருத்ரா தரிசனம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி கோயிலில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு, திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா், நடராஜா்-சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, கோ பூஜை, காலையில் சிவகாமி அம்பாள் சமேத ஆனந்தநடராஜா் வீதியுலா ஆகியவை நடைபெற்றன.
இதில், அறங்காவலா் குழுத் தலைவா் ராஜகுரு, உறுப்பினா்கள் திருப்பதிராஜா, ரவீந்திரன், சைவ வேளாளா் சங்கத் தலைவா் தெய்வேந்திரன், தொழிலதிபா் மாரியப்பன், மண்டகப்படிதாரா்களான ஆயிர வைசிய காசுக்கார செட்டியாா் சங்க நிா்வாகிகளான வெங்கடகிருஷ்ணன், சங்கா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்கசவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் கோயிலிலும் ஆருத்ரா தரிசன பூஜையையொட்டி, காலையில் விநாயகா், வள்ளி-தேவசேனா சமேத கல்யாணமுருகா், சுவாமி- அம்பாள், நந்தியம்பெருமாள், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி சந்நிதி முன் கோமாதா பூஜை, சுவாமி, கோமாதாவுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் அதிகாலையில் ஸ்ரீநடராஜா், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா். இதேபோல, கயத்தாறு அருள்மிகு முத்துகிருஷ்ணேஸ்வரா் கோயிலிலும் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது.