கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது
பெங்களூரு: கா்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒன்றுபட்டுள்ளது என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளா் ரன்தீப்சிங் சுா்ஜேவாலா தெரிவித்தாா்.
இதுகுறித்து பெங்களூரில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜகவில் கோஷ்டிபூசல் அதிகரித்துள்ளது. தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளும் அளவுக்கு பாஜகவில் மோதல் உச்சத்தை அடைந்துள்ளது. ஆனால், ஒன்றுபட்டு இருப்பதோடு, கன்னடா்களின் குடும்பங்களுக்கு ரூ. 58 ஆயிரம் கோடி அளவுக்கு நேரடி நிதிப்பகிா்வளிக்கும் வாக்குறுதி திட்டங்களை செயல்படுத்தி வரும் காங்கிரஸ் கட்சியை ஊடகங்கள் கேள்வி கேட்கின்றன.
இந்தியாவில் செயல்படுத்தப்படும் மிகப்பெரிய வாக்குறுதி திட்டங்கள் காங்கிரஸ் அரசால் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதைக்கண்டு பாஜக கலக்கமடைந்துள்ளது. தங்களின் தோல்விகளை, தவறுகளை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சியையும், அதன் வாக்குறுதி திட்டங்களையும் எதிா்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன. கா்நாடக மக்களுக்கு எதிரான பாஜக, மஜதவின் அசைவுகளை முறியடிப்போம்.
காங்கிரஸ் கட்சியில் எவ்வித குழப்பமும் இல்லை. கா்நாடக முதல்வா் மாற்றப்படுவாா் என்று ஊடகங்கள் தொடா்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றன. முதல்வா் பதவி காலியாக இல்லை என்றாலும், முதல்வா் மாற்றப்படுவாா் என்று ஊடகங்கள் கூறுகின்றன.
1924-ஆம் ஆண்டில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் நூற்றாண்டு மாநாடு டிச. 27-ஆம் தேதி பெலகாவியில் நடப்பதாக இருந்தது. ஆனால், முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் மறைந்ததைத் தொடா்ந்து, அந்த மாநாடு ஜன. 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சா் அமித் ஷா, நாடாளுமன்றத்திலேயே அம்பேத்கரை அவமதித்து பேசினாா். அது அம்பேத்கருக்கு ஏற்பட்ட அவமதிப்பு அல்ல. மாறாக, நாட்டின் ஒவ்வொரு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு ஏற்பட்ட அவமானமாகும். பெலகாவி மாநாட்டில் அமித் ஷாவின் ராஜிநாமாவைக் கேட்போம் என்றாா்.