Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதி...
2024: லாபம் அளித்த முதல் 7 நிறுவனப் பங்குகள்!
2024 ஆம் ஆண்டின் இந்தியப் பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களுடன் அமைந்தது. குறிப்பாக, நவம்பர் முதல் டிசம்பர் வரையில் பெரும்பாலும் சரிவையே கொண்டிருந்தது. இருப்பினும், சில நிறுவனங்கள் மட்டும் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபத்தை அளித்தன. அவற்றில் முதல் 7 நிறுவனங்களைப் பற்றி..
ஜி.இ. வெர்னோவா டி&டீ இந்தியா லிமிடெட் (GE Vernova T&D India Ltd)
கனரக மின்னனு சாதன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்கு ஜனவரி மாதத்தில் ரூ. 528-ஆக இருந்தது; ஆனால், தற்போது ரூ.2150-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம், இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஜனவரி முதல் டிசம்பர் வரையில் 349 சதவிகிதம் வரையில் உயர்ந்துள்ளது தெரிகிறது.
மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட் (Motilal Oswal Financial Services Ltd)
பங்குச் சந்தை தரகு நிறுவனமாகவும், மியூச்சுவல் ஃபண்டு மேலாண்மை நிறுவனமாகவும் செயல்படும், இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜனவரி முதல் தேதியில் ரூ. 315-ஆக இருந்தது; தற்போது ரூ. 920-ஆக உயர்ந்துள்ளது. இந்தாண்டில் மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 226.5 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
ஜோதி சிஎன்சி ஆட்டோமேஷன் லிமிடெட் (Jyoti CNC Automation Ltd)
தொழிற்துறை உபகரணம், இயந்திரங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டிலேயே 200.3 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜனவரியில் ரூ. 431-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 1,304.2-ஆக உள்ளது.
ஆரக்கிள் ஃபைனான்சியல் சர்வீசஸ் சாஃப்ட்வேர் லிமிடெட் (Oracle Financial Services Software Ltd)
வங்கி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு தகவல் தொழில்நுட்பச் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ஜனவரி முதல் தேதியில் ஒரு பங்கு மதிப்பு ரூ. 4,400-ஆக இருந்தது; தற்போது, ரூ. 12,245-ஆக உள்ளது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ஓராண்டில் 190 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க:இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு!
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி கார்ப்பரேசன் லிமிடெட் (Housing and Urban Development Corporation Ltd)
உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும் இந்த நிறுவனத்தின் மதிப்பு இந்தாண்டில் 179 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ரூ. 129-ஆக இருந்த நிலையில், தற்போது ரூ. 250-ஆக உயர்ந்துள்ளது.
காட்ஃப்ரே பிலிப்ஸ் இந்தியா லிமிடெட் (Godfrey Phillips India Ltd)
அதிவேகமாக நகரும் நுகர்வோர் பொருள்கள் (FMCG) தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜனவரியில் ரூ. 2,153-ஆக இருந்தது; தற்போது, ரூ. 5,000-ஐ கடந்ததன் மூலம் 178 சதவிகிதம் உயர்ந்திருப்பது தெரிகிறது.
டிக்ஸான் டெக்னாலஜிஸ் லிமிடெட் (இந்தியா) (Dixon Technologies (India) Ltd)
வீட்டு உபயோகப் பொருள்கள், மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு ஜனவரியில் ரூ. 6,316-ஆக இருந்தது. தற்போது, இதன் ஒரு பங்கு மதிப்பு ரூ. 17,514-ஆக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஓராண்டில் 174 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
எந்தவொரு முதலீட்டு முடிவுகளையும் எடுப்பதற்கு முன்பு சான்றளிக்கப்பட்ட நிபுணர்களுடன் சரிபார்க்குமாறு பொருளாதாரவியலாளர்கள் அறிவுறுத்துகின்றனர்.