இஸ்ரேல் தாக்குதல்: நூலிழையில் தப்பிய உலக சுகாதார அமைப்பின் இயக்குநர்!
இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருந்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் வியாழக்கிழமை நூலிழையில் உயிர்தப்பியுள்ளார்.
இந்த தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள அவை இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
யேமன் தலைநகர் சனா விமான நிலையத்துக்கு டெட்ராஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு, ஐ.நா., பிரதிநிதிகள் வியாழக்கிழமை விமானம் ஏறுவதற்காக வருகை தந்திருந்த நேரத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.
இதுகுறித்து டெட்ராஸ் வெளியிட்ட செய்தியில்,
யேமனுக்கு சுகாதாரம் மற்றும் மனிதாபிமான நிலைமையை மதிப்பிடுவதற்கும், பிடித்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. ஊழியர்களை விடுவிப்பது குறித்து ஆலோசிக்க சென்றிருந்தோம்.
சனாவில் விமானம் ஏறுவதற்காக காத்திருந்தபோது, விமான நிலையம் தாக்குதலுக்கு உள்ளானது. எங்கள் விமானப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். விமான நிலையத்தில் குறைந்தது இருவர் பலி ஆகியிருக்கக் கூடும்.
விமான ஓடுதளம் சேதமடைந்துள்ளது, சரிசெய்யும் வரை இங்கே காத்திருக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது. நானும், என்னுடன் இருப்பவர்களும் பாதுகாப்பாக இருக்கிறோம். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங் உடலுக்கு ராகுல், கார்கே அஞ்சலி!
இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டும் என்றும், மக்கள், பணியாளர்கள் மீது ஒருபோதும் தாக்குதல் நடத்தக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், சனா சர்வதேச விமான நிலையம், செங்கடல் துறைமுகங்கள் மற்றும் யேமனில் உள்ள மின் நிலையங்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் ஆபத்தானது என்று தெரிவித்துள்ளார். அனைத்துத் தரப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறித்தியுள்ளார்.
மேற்கு கடற்கரை மற்றும் யேமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களின் ராணுவ உட்கட்டமைப்பை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில், சனா விமான நிலையமும் ஒன்று என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.