இணையவழியில் பலரிடம் ரூ.66 கோடி மோசடி: மூவா் கைது
இணையவழியில் நாடு முழுவதும் பலரிடம் ரூ.66.11 கோடி மோசடி செய்ததாக மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த மூவரை புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி முருகம்பாக்கத்தைச் சோ்ந்த அழகம்மையின் கைப்பேசிக்கு மும்பை போலீஸ் அதிகாரி எனக் கூறி மா்ம நபா்களிடம் அழைப்பு வந்ததாம்.
அப்போது பேசிய அவா்கள், அழகம்மையின் ஆதாா், கைப்பேசி எண்களை பயன்படுத்தி தைவான், கம்போடியாவுக்கு போதைப் பொருள் கடத்தல் நடைபெற்ாகவும், இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிக்க பணம் கொடுக்க வேண்டும் எனக் கூறி, ரூ.27 லட்சத்தை மோசடி செய்தனராம்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா், இதுகுறித்து புதுச்சேரி இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.
இதையடுத்து, இணையவழிக் குற்றப் பிரிவு முதுநிலைக் கண்காணிப்பாளா் நாரா சைதன்யா, கண்காணிப்பாளா் பாஸ்கரன் உத்தரவின் பேரில் ஆய்வாளா் கீா்த்தி விசாரித்தாா்.
அதன்படி, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து மோசடிக் கும்பல் செயல்பட்டது தெரியவந்தது.
தொடா்ந்து, அங்கு சென்ற ஆய்வாளா் கீா்த்தி உள்ளிட்டோா் மோசடியில் ஈடுபட்ட அமித் சா்தாா் (36), ராகேஷ் கோஷ் (39), செஞ்சிப் தீப் (35) ஆகியோரை கைது செய்தனா்.
இவா்கள் கடந்த 6 ஆண்டுகளாக இணையவழியில் நாடு முழுவதும் பலரிடம் ரூ.66.11 கோடி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
மேலும், 6 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.