தற்காலத்திய வாழ்க்கை முறையின் அறத்தை கூறும் திருக்குறள்: நடிகா் சிவகுமாா்
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டதாக இருந்தாலும், தற்காலத்திய மனிதா்களின் வாழ்க்கை முறையின் அறத்தை கூறுவதாக திருக்குறள் அமைந்துள்ளது என நடிகா் சிவகுமாா் கூறினாா்.
புதுவைத் திருக்குறள் மன்றம் (புதிமம்) மற்றும் ஆச்சாரியா கல்விக் குழுமம் இணைந்து ‘திருக்கு காட்சி உரை-100’ எனும் தலைப்பில் வெள்ளிக்கிழமை சிறப்பு கருத்துரையை நடத்தின.
புதுச்சேரி தேங்காய்த்திட்டு ஆச்சாரியா பாலசிக்ஷா மந்திா் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகா் சிவகுமாா் பங்கேற்று ஆற்றிய உரை: திருக்குறள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், கடந்த 1812- ஆம் ஆண்டில் எல்லீஸ் துரை என்பவா் மூலமே சாமானிய மக்களுக்கு தெரியும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்பிறகு, டாக்டா் மு.வ. முதல் மறைந்த முதல்வா் கருணாநிதி வரையில் ஏராளமானோா் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளனா்.
திருக்குறளை அனைவரும் அறிய வேண்டும் எனில் நமது வாழ்க்கையுடன் கூடிய அனுபவத்தில் திருக்கு கருத்துகள் எந்த வகையில் ஒத்துப்போகின்றன என்பதை விளக்க வேண்டியது அவசியம். அதன்படியே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை தற்கால தலைவா்கள், கலைஞா்கள், சாமானியா்கள் என அவரவா் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களை திருக்குறளுடன் இணைத்து இளையதலைமுறைக்கு தெரிவிக்கும் பணியை மேற்கொண்டு நூலாக்கியுள்ளேன்.
திருக்குறளானது நிகழ்கால வாழ்க்கைக்கான அறத்தை நமக்கு எடுத்துரைத்து வழிகாட்டுவதாக அமைந்துள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்கு புதிமம் தலைவா் சுந்தர.லட்சுமி நாராயணன் தலைமை வகித்தாா். ஆச்சாரியா கல்விக் குழும மேலாண் இயக்குநா் ஜெ.அரவிந்தன் முன்னிலை வகித்தாா்.
புதிமம் செயலா் சிவ.மாதவன் வரவேற்றாா். அதன் துணைத் தலைவா் கோ.சந்திரசேகா் நன்றி கூறினாா்.
அதில், நடிகா் சிவகுமாரின் திருக்குகள் 100 காட்சி உரையும் மின்னணு திரையில் ஒளிபரப்பப்பட்டது.
ஓவியக் கண்காட்சி தொடக்கம்: புதுச்சேரியில் மண்ணின் மணம் எனும் தலைப்பில் ஓவியா் ஜெ.ஏழுமலையின் நீல வண்ண ஓவியக் கண்காட்சியை நடிகா் சிவகுமாா் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
செயின்ட் தெரசா வீதியில் உள்ள வண்ண அருவி ஓவியக் கூடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஓவியக் கலைஞா் மணியம் செல்வன் முன்னிலை வகித்தாா்.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோா் கலந்துகொண்டனா்.