`விஜய் மக்களை சந்திக்க வேண்டும்; அப்போதுதான் புரிந்து கொள்ள முடியும்’ - சொல்கிறார் திருநாவுக்கரசர்
திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,
“இந்தியாவில் உள்ள கட்சிகள், அந்தந்த மாநிலங்களில் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற உணர்வோடு பணியாற்றுவார்கள். எல்லோரும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வர வேண்டும், பங்கெடுக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், கூட்டணி கட்சியில் அமைச்சரவையில் தங்களுக்கு என்று எந்த எண்ணிக்கையையும் இதுவரை அவர் குறிப்பிடவில்லை. அதேபோல், எண்ணிக்கை அடிப்படையில் நாங்கள் ஒருபோதும் அழுத்தம் கொடுக்கவும் மாட்டோம் என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2006 - ல் பெரும்பான்மை இடத்தை விட மிகக் குறைவாக தி.மு.க பெற்று இருந்தது. அந்த சமயத்தில் காங்கிரஸுக்கு,ஆட்சியில் அதிகாரம் கொடுப்பதற்கான வாய்ப்பு இருந்தது. கலைஞரும் அதற்கு தயாராக தான் இருந்தார். ஆனால், காங்கிரஸ் அமைச்சரவையில் வற்புறுத்தி இடம் வேண்டும் என்று கேட்கவில்லை. அதேபோல் இந்த தேர்தலிலும் இடங்கள் தொடர்பான எண்ணிக்கை எவ்வளவு வேண்டும் என்றோ அமைச்சர் பதவி வேண்டும் என்றோ எந்த ஒரு நிபந்தனையும் காங்கிரஸ் கேட்கவில்லை. தேர்தல் என்பது ஒரு நம்பர் விளையாட்டு போல தான். இதுவரை நாங்கள் எந்த நிபந்தனையும் முன் வைக்கவில்லை. கூட்டணி ஆட்சியில், ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது ஏற்கனவே பல கட்சிகள் முன்வைத்தது தான்.
நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒரே ஒரு மாநாட்டை நடத்தியுள்ளார். அதன் பிறகு ஆங்காங்கே ஒரு சில கூட்டங்களை நடத்தி இருக்கிறார். ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இருக்கிறார். இன்னும் கட்சி ஆரம்பித்து ஒரு வருடம் கூட ஆகவில்லை ஆனால், தன்னுடைய ஆசையையும், விருப்பத்தையும் தெரிவித்து இருக்கிறார். அதில் அமைச்சரவையில் பங்கு, ஆட்சியில் அதிகாரம் என்பது இயல்பானது தான். கூட்டணி கட்சியில் அமைச்சரவையில் நம்முடைய கட்சியும் இடம் பெற வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டனுக்கும் ஆசையும் இருக்கும். அதை போல், என்னுடைய தனிப்பட்ட ஆசையை நான் இங்கு முன் வைக்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸ் கட்சி என்பது ஒரு ஒருங்கிணைந்த கட்சி. அதில் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தை நான் கூறுவது தவறாக மாறிவிடும். எனவே, ஆசை என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு.
இந்தியா கூட்டணியில் தமிழகத்தை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையேற்று நடத்துமா என்று கேட்கிறீர்கள். ஏற்கனவே, தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அந்த நாற்காலியில் இருக்கிறார். அவர்தான் இந்தியா கூட்டணியை முன்னிறுத்தி செயல்படுத்தி வருகிறார். அவர் இருக்கும் போது எப்படி தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்கும்?. ஒரு வீட்டுக்குள் வயதில் மூத்தவரை மற்றவர்கள் எல்லாம் அவரை அண்ணன் என்று அழைப்பார்கள். அதேபோல் தான், கூட்டணியில் இருக்கக்கூடிய பெரிய கட்சி தி.மு.க. எனவே, அந்த கட்சிக்குரிய மரியாதையை மற்ற கட்சிகள் கொடுக்க செய்வார்கள்.
கடந்த 50 ஆண்டுகளில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அதிக வசைப்பாடுவது காவல்துறையை மட்டும் தான். எல்லா காலகட்டங்களிலும் குற்றங்கள் என்பது தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. எனவே, எதிர்கட்சிகள் நிச்சயம் காவல்துறையை குற்றம்சாட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். ஆனால், நாங்களோ கூட்டணி கட்சியில் இருக்க கூடியவர்கள். எங்களிடமிருந்து வேறு என்ன நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?. இருப்பினும் மக்கள் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க வேண்டியது அனைத்துக் கட்சிகளின் தார்மீக கடமையாகும். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்குவதில் ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதேபோல், இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு, கல்வி, உள்ளிட்ட அனைத்துக்கும் இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு என்பது அவசியமானது. மத்திய அரசுக்கு என்று ஒரு தனி எல்லையோ, தனி நாடு என்றோ கிடையாது. மத்திய அரசு மற்ற மாநிலங்களோடு கலந்து இதை செயல்படுத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசும் தமிழக முதல்வரும் தயாராக இருக்கிறார். ஆனால், மத்திய அரசினுடைய பங்களிப்பு இல்லாமல் நடத்த முடியாது. மணிப்பூர் கலவரம் என்பது ஆராய வேண்டியது. மேல் நடவடிக்கை என்பது அவசியமானது இது, அந்த மாநிலத்தினுடைய அரசு மற்றும் மத்திய அரசு செயல்படுத்த வேண்டியது.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு தங்களுடைய உடைமைகளை, சொத்துக்களை இழந்த தவிக்கின்றனர். உச்ச நீதிமன்ற நீதிபதி அளவில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அவர்களுடைய தலைமையில் விசாரணை நடத்தி அங்கு இருக்கக்கூடிய இரு தரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுக்கு இடையிலான பிரிவினையை, தூண்டுதலை ஏற்படுத்தியவர்கள் யார் என்பது குறித்து விசாரிப்பது மத்திய அரசினுடைய கடமையாகும்.
காங்கிரஸினுடைய கொள்கை, இருமொழிக் கொள்கை கிடையாது. இந்தியை யாரும் பயில வேண்டாம் என்ற தமிழகத்தில் கூறவில்லை. இன்றும் திருச்சியில் அமைந்துள்ள இந்தி பிரசார சபாவில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதி பட்டஙகளை பெறுகிறார்கள். நான் கூட இந்தி தேர்வு எழுதி உள்ளேன். விருப்பப்படுபவர்கள் இந்தியை படித்துக் கொள்ளலாம். இந்தியை கட்டாயமாக திணிப்பது இந்தி மொழியை தமிழ் மொழிக்கு மேலாக கொண்டு செல்ல முயற்சிப்பதைதோ, தமிழை இரண்டாம் தர மொழியாக மாற்ற முயற்சிப்பதைதோ, ஏற்க முடியாது. மொழியை தெரிந்து வைத்திருப்பது நன்மையானது தான் . ஆனால், ஒரு மொழி மீது இன்னொரு மொழியை திணிப்பது என்பது தவறானது.
இந்தியா என்பது இன்று ஒரே நாடாகத்தான் இருக்கிறது இந்தியா என்ன நான்கு நாடாக பிரிந்து கிடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த இந்தியாவுக்குள் இருக்கக்கூடிய மாநிலங்களில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு ஆட்சி அதிகாரம் ஒரு கட்சியினுடைய வீழ்ச்சி, ஒவ்வொரு கட்சிகளுடைய ஆட்சிக்கலைப்பு என பல பிரச்னைகள் இருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்கள் எல்லாவற்றிலும் தனித்தனியாக இருக்கும்போது எல்லாவற்றிலும் ஒரே நாடு, ஒரே உடை , ஒரே உணவு என்று சொல்வதை ஏற்க முடியாது. இந்தியா என்பது பல நாடுகளை உள்ளடக்கிய ஒரு நாடு. மொழிவாரி மாநிலங்களாகவும், உணவு, உடை, கலாசாரம் என்று அனைத்தும் ஒன்றிணைந்த ஒரு நாடு இந்தியா. ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது.
எம்.ஜி.ஆரின் பெயரையும், புகழையும் அனேகர் இன்று கூறுகிறார்கள். கட்சி ஆரம்பிப்பவர்கள் முதற்கொண்டு இன்று எம்.ஜி.ஆரை பாராட்டுகிறார்களோ இல்லையோ அவரை திட்டுவதை யாரும் ஏற்க மாட்டார்கள். விஜய் எம்.ஜி.ஆரின் நினைவு நாளில் மரியாதை செலுத்தவில்லை என்பதை சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள். ஆனால் , அதை நாம் விமர்சிக்க தேவையில்லை. விஜயை பொறுத்தவரை மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க போகவில்லை. ஆனால், அவர் இருந்த இடத்தில் அழைத்து தன்னால் முடிந்ததை செய்தார். அதை நாம் விமர்சிக்க கூடாது. இருந்தாலும் விஜய் மக்களை நேரில் போய் சந்திக்க வேண்டும். சந்திக்காமல் இருக்கக்கூடாது. சந்தித்தால் தான் மக்களை நாம் புரிந்து கொள்ள முடியும். நாட்டினுடைய பல கலாசாரம், மொழி, பண்பாடு என அனைத்தையும் பிரதிபலிக்கக் கூடியதாக இந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறுகிறது. எனவே, அதில் ஒவ்வொரு மாநிலத்தையும் அடையாளப்படுத்த வேண்டும். அது தடுக்கப்பட்டால் கண்டிப்பாக அது கண்டிக்கத்தக்கது” என்றார்.