சிவகாமிபுரத்தில் ரூ.7.60 லட்சத்தில் நீா்த்தேக்க தொட்டிக்கு அடிக்கல்
Manmohan Singh: "நான் சைலன்ட் பிரைம் மினிஸ்டரா?" - மன்மோகன் சிங் அன்று சொன்ன பதில்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.
அவரின் மறைவுக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை தொடர்ந்து 10 ஆண்டுகளாக நாட்டின் பிரதமராக மன்மோகன் சிங் இருந்திருக்கிறார். பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொண்டிருக்கிறார். குறிப்பாக 2008-ல் உலகமே மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தபோது, இந்தியாவில் திறமையுடன் பொருளாதார நெருக்கடியை சமாளித்திருக்கிறார்.
அவர் மறைவைத் தொடர்ந்து அவர் குறித்த பல்வேறு செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்தவகையில் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அளித்த பதில் ஒன்று இணையத்தில் வைரலாகி இருக்கிறது. ஒரு முறை பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம் அமைதியான பிரதம மந்திரி என்று உங்களை விமர்சனம் செய்வதை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “ நீங்கள் அமைதியான பிரதம மந்திரியா? என்ற உங்கள் கேள்விக்கானப் பதில் நான் எழுதிய ‘Changing India’ என்ற புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்கு அஞ்சும் பிரதமர் நான் இல்லை. அடிக்கடி நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவேன். 2005 ஆம் ஆண்டு வாஷிங்டனில் நேஷனல் பிரஸ் கிளப் ஏற்பாடு செய்திருந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேச வேண்டாம் என்று அதிகாரிகள் என்னை அறிவுறுத்தினர்.
ஆனால் நான் வெற்றிகரமாக அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசினேன். என்னுடைய சாதனைகளைப் பற்றி நானே எப்போதும் பேசிக்கொள்ள மாட்டேன். நான் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும் நான் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசுவேன். நான் அமைதியான பிரதமர் இல்லை” என்று மன்மோகன் சிங் பதிலளித்திருக்கிறார்.