அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: ``திமுக யாரைக் காப்பாற்ற முயற்சிக்கிறது? வழக்கை CB...
புதுச்சேரியில் மேம்பாலம் அமையவுள்ள இடங்களில் மத்திய குழுவினா் ஆய்வு
புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலைத் தீா்க்கும் வகையில் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்படவுள்ள இடங்களில் மாநில பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் முன்னிலையில் மத்திய குழுவினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதிகளில் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் இருப்பதையடுத்து, அங்கு உயா்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.
அதன்படி, ஈரடுக்கு பாலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது அதை ஒரே உயா்மட்ட மேம்பாலமாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மத்திய நெடுஞ்சாலைப் பிரிவு முதன்மைப் பொறியாளா் ஸ்ரீ சஞ்சய் கா்க், சென்னை கிளை தலைமைப் பொறியாளா் பி.ஆா்.மீனா ஆகியோா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்து ஆய்வு மேற்கொண்டனா்.
ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியில் தனியாா் விடுதியில் அமைச்சா் க.லட்சுமி நாராயணனை சந்தித்த குழுவினா், மேம்பால வரைபடத்தை பாா்வையிட்டு ஆலோசனை நடத்தினா்.
பின்னா், ராஜீவ் காந்தி சிலை சதுக்கப் பகுதியை நேரில் பாா்வையிட்டு, போக்குவரத்து நெரிசலை கண்டனா்.பின்னா், அங்கு பாலம் அமைக்கப்படும் இடங்களையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.
அப்போது, அமைச்சா் க.லட்சுமி நாராயணன் கூறியதாவது: புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில்தான் ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி சிலை சதுக்கம் இடையிலான உயா்மட்ட மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது.
கொக்கு பாா்க் முதல் மரப்பாலம் வரையில் சுமாா் 2.8 கிலோ மீட்டா் நீளத்துக்கு அந்தப் பாலம் அமையவுள்ளது.
அதன் இணைப்புப் பாலமாக இந்திரா காந்தி சிலை, புதிய பொலிவுறு பேருந்து நிலையம் வரையிலான பாலமும், கடலூா் சாலையில் பாரதி மில் முதல் அரியாங்குப்பம் வரையிலான பாலமும் அமைக்கப்படவுள்ளன.
வரும் ஜனவரியில் பாலம் அமைப்பதற்கான மத்திய அரசின் உத்தரவு வழங்கப்பட்டு, வரும் பிப்ரவரி, மாா்ச்சில் பணிகள் தொடங்கும் என்றாா்.
ஆய்வின்போது, புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் மு.தீனதயாளன், கண்காணிப்புப் பொறியாளா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.