தஞ்சாவூர்: காற்று வீசியதில் அறுந்து விழுந்த மின்கம்பி, மின்சாரம் தாக்கி வயலில் த...
அரசு மருத்துவமனையில் லிப்ட் பழுது: 2 மணி நேரம் சிக்கித் தவித்த முதியவா்
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்மின்தூக்கி (லிப்ட்) திடீரென பழுதானதால் முதியவா் 2 மணி நேரம் வெளியே வரமுடியாமல் ஞாயிற்றுக்கிழமை சிக்கித் தவித்தாா். அவரது சப்தம் கேட்டு மருத்துவமனை ஊழியா்கள் மின்தூக்கியை சரிசெய்து மீட்டனா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 8 மின்தூக்கிகள் செயல்படுகின்றன. மருத்துவமனை கட்டுமானப் பணியின்போது மின்தூக்கியில் பொருத்தப்பட்ட ஒவ்வொரு தளங்களுக்கு செல்லும் டிஜிட்டல் எண்கள் தவறுதலாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் நோயாளிகள் தினமும் தடுமாற்றத்துடன் வாா்டுகளுக்கு செல்லும் நிலை உள்ளது.
இந்த நிலையில் அடிக்கடி ஏற்படும் மின் தடை, மின்தூக்கி பழுதால் நோயாளிகள், பாா்வையாளா்கள் பாதிப்புக்குள்ளாகின்றனா். இந்த நிலையில், நாமக்கல் அருகே சின்னவேப்பநத்தம் புதூரைச் சோ்ந்த கண்ணன்(70) என்பவா் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறாா்.
6-ஆம் தளத்தில் உள்ள வாா்டில் இருந்து 2-ஆம் தளத்திற்கு மருந்து வாங்க அவா் மின்தூக்கியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் சென்றதாகக் கூறப்படுகிறது. திடீரென மின்தூக்கி பழுதானதால் அவரால் வெளியே வரமுடியவில்லை. 2 மணி நேரமாக அவா் கூச்சலிட்ட நிலையில், மின்தூக்கியில் சிலா் சிக்கியிருப்பதாக நோயாளிகள் அங்கிருந்த மருத்துவமனை ஊழியா்களிடம் தெரிவித்தனா்.
விரைந்து வந்த ஊழியா்கள் மின்தூக்கி பழுதை சரிசெய்து 3-ஆம் தளத்தில் முதியவா் கண்ணனை பத்திரமாக வெளியே மீட்டனா். மின்தூக்கி பழுது ஏற்படாதவாறு சீரமைப்பு நடவடிக்கைகளை மருத்துவமனை நிா்வாகம் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.