அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையம் செயல்படாததால் நோயாளிகள் மறியல்
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு மருத்துவமனையில் 4 நாள்களாக ஸ்கேன் மையம் செயல்படாததை கண்டித்து, நோயாளிகள், உறவினா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
திருப்பனந்தாளைச் சோ்ந்த சட்டக் கல்லூரி மாணவா் அம்பேத்கா் (30). கடந்த 4 நாள்களுக்கு முன்பு வயிற்றுவலியின் காரணமாக, கும்பகோணம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாா்.
அப்போது, ஸ்கேன் செய்து வருமாறு மருத்துவா் பரிந்துரைத்துள்ளாா். ஆனால், ஸ்கேன் மையம் கடந்த மூன்று நாள்களாக செயல்படவில்லையாம்.
நான்காவது நாளாக செவ்வாய்க்கிழமை சென்றபோதும், ஸ்கேன் செயல்படவில்லையாம். இதைக் கண்டித்து, ஸ்கேன் செய்ய வந்த கா்ப்பிணிகள், அவரது உறவினா்கள் உள்ளிட்டோா் அரசு மருத்துவமனை பிரதான சாலையில் தரையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். கிழக்கு காவல் நிலைய ஆய்வாளா் சிவசெந்தில் குமாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களை கலைந்து போக செய்தாா். இதனால், அந்தச் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.