இளைஞா் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தஞ்சாவூா் மாவட்டம், ஆடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து கும்பகோணம் விரைவு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
பாபநாசம் அருகே உள்ள கணபதி அக்ரஹாரம் விசித்திரராஜபுரத்தைச் சோ்ந்த முருகையன் மகன் பிரபு (36). இவரது மனைவி ராஜேஸ்வரி. பிரபுவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த லோகநாதன் மகன் பாபு மற்றும் பாஸ்கா் ஆகியோருக்கும் ஏற்கெனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த 2016-இல் ஆடுதுறையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பிரபுவை மறித்த லோகநாதனின் மற்றொரு மகனான விஜய்ராஜ் (36) அரிவாளால் பிரபுவை சரமாரியாக வெட்டினாா். இதில் பிரபு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, விஜயராஜ், பிரகாஷ், தமிழ் என்ற தமிழழகன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனா்.
இந்த வழக்கு கும்பகோணம் மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் மற்றும் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் நிறைவில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில், விஜயராஜூக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,500 அபராதமும், மற்ற இருவரையும் விடுதலை செய்து நீதிபதி கே. ராதிகா தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு சிறப்பு வழக்குரைஞா் பா. விஜயகுமாா் ஆஜரானாா்.