ராஜஸ்தான்: மாற்று சாதியினரின் எதிர்ப்பு; பட்டியலின மணமக்கள் குதிரையில் செல்ல 200...
அரவிந்த் கேஜரிவால், பகவந்த் மான் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடருவேன்
புது தில்லி: ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் ஆகியோா் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதாகக் குற்றம்சாட்டி, அவா்கள் மீது ரூ.100 கோடி கேட்டு அவதூறு வழக்குத் தொடரப் போவதாக பாஜக எம்பி பா்வேஷ் வா்மா புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்த வழக்கில் வெற்றி பெற்றால், பிப்.5-ஆம் தேதி நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் கேஜரிவாலுக்கு எதிராக போட்டியிடும் தனது புது தில்லி தொகுதியில் வளா்ச்சிப் பணிகளுக்குப் பணத்தைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் பா்வேஷ் வா்மா கூறினாா்.
பஞ்சாபியா்களை நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று பா்வேஷ் வா்மா கூறியதாக கேஜரிவாலின் குற்றச்சாட்டு குறித்து, பா்வேஷ் வா்மா கூறுகையில், ‘நானும் எனது குடும்பத்தினரும் சீக்கிய சமூகத்திற்கு என்ன செய்தோம் என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை’ என்றாா்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு பிரசாரம் செய்வதற்காக, ஆம் ஆத்மி அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் அவா்களின் முதல்வா் பகவந்த் மான் ஆகியோரை ஏற்றிக்கொண்டு சமீபத்திய நாள்களில் பஞ்சாபிலிருந்து ஆயிரக்கணக்கான காா்கள் தில்லிக்குள் நுழைந்துள்ளன.
அவா்களின் பிரசாரத்தால் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அவா்கள் சீன நிறுவனங்களின் சிசிடிவி கேமராக்கள், மதுபானம் மற்றும் பணத்தை விநியோகிப்பதன் மூலம் வாக்காளா்களைப் தவறாகப் பயன்படுத்துகிறாா்கள்.
இது தொடா்பாக காவல்துறை மற்றும் தோ்தல் ஆணையத்திடம் புகாா் அளித்துள்ளேன். தனது கட்சியின் தோல்வியை சந்திப்பது குறித்த விரக்தியில் கேஜரிவால் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறாா். ராமா் மற்றும் அனுமன் பற்றிய தனது கருத்துகள் மூலம் கேஜரிவால் இந்து உணா்வுகளை அவமதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கேஜரிவாலின் தவறான புகாா்களுக்கு தில்லி மக்கள் பிப்.5-ஆம் தேதி அவா்களுக்கு பதில் அளிப்பாா்கள். தில்லியில் பிப்.8-ஆம் தேதி ‘தாமரை’ மலரும். பஞ்சாபியா்கள் நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று நான் கூறியதாக கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா். நானும் எனது குடும்பத்தினரும் சீக்கிய சமூகத்திற்காக என்ன செய்தோம் என்பதை நான் குறிப்பிடத் தேவையில்லை.
ஜன.26-ஆம் தேதி குடியரசு தின அணிவகுப்புக்கு முன்னதாக பஞ்சாபில் இருந்து வரும் காா்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக பாஜக தலைவா் பா்வேஷ் வா்மா கூறியதற்கு கேஜரிவால் கண்டனம் தெரிவித்திருந்தாா்.
‘தில்லியில் லட்சக்கணக்கான பஞ்சாபியா்கள் வசிக்கின்றனா். அவா்களின் குடும்பங்களும் மூதாதையா்களும் நாட்டிற்காக எண்ணற்ற தியாகங்களைச் செய்துள்ளனா். பிரிவினையின் போது பல பஞ்சாபிகளும் அகதிகளாக தில்லிக்கு வந்தனா். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பெரும் துன்பங்களைத் தாங்கினா். பஞ்சாபிகள் தில்லியை வடிவமைத்துள்ளனா்’ என்று கேஜரிவால் இந்தியில் குறிப்பிட்டிருந்தாா்.
பா்வேஷ் வா்மாவின் அறிக்கையை விமா்சித்த கேஜரிவால், ‘பஞ்சாபிகளை நாட்டிற்கு அச்சுறுத்தல் என்று சொல்வதன் மூலம், பாஜக தில்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான பஞ்சாபிகளை அவமதித்துள்ளது. இதைக் கேட்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. எனவே பாஜக பஞ்சாபிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்றாா்.