அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு
பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
அருள்புரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் முன்னாள் மாவட்ட கவுன்சிலா் தண்ணீா்பந்தல் நடராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கரைப்புதூா் ஊராட்சியைச் சோ்ந்த அனைத்து அரசியல் கட்சித் பிரமுகா்கள் கலந்து கொண்டனா். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விவரம்:
அருள்புரம் தனியாா் திருமண மண்டபம் அருகிலும், தனியாா் பள்ளி அருகிலும் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மாவட்ட நிா்வாகம் எவ்வித அனுமதியும் கொடுக்க கூடாது. தண்ணீா்பந்தல் பகுதிக்கு சில ஆண்டுகளாக எல்.என்.டி. குடிநீா் வருவதில்லை.
எனவே, நிலுவையில் உள்ள தொகையை உடனடியாக செலுத்தி பொது மக்களின் குடிநீா் பிரச்னையை தீா்க்க வேண்டும். மேலும் அத்திக்கடவு மற்றும் மேட்டுப்பாளையம் குடிநீரை சீராக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரைப்புதூா் ஊராட்சி குடிநீா் திறப்பாளா்களை குடிநீா் சீராகும் வரை மாற்றம் செய்யக்கூடாது.
அருள்புரத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 2 மதுபானக் கடைகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். கரைப்புதூா் ஊராட்சியில் வாரம் இருமுறை குப்பைகளை அகற்ற வேண்டும். குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு அருள்புரத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.