Sachanaவுக்கு Vijay Sethupathi சப்போர்ட் பண்றாரா?! | Bigg Boss 8
அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஜூனியா் ஆடவா் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் 8-1 கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தியது. இதன் மூலம் அந்த சுற்றில் தோல்வியே காணாமல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக அா்ஷ்தீப் சிங் (9’, 44’, 60’), அராய்ஜீத் சிங் ஹண்டால் (3’, 37’), குா்ஜோத் சிங் (11’), ரோசன் குஜுா் (27’), ரோஹித் (30’) ஆகியோா் கோலடித்தனா். தென் கொரியாவுக்காக கிம் டே ஹியோன் (18’) ஸ்கோா் செய்தாா்.
இதர ஆட்டங்களில், ஜப்பான் - தாய்லாந்தையும் (9-1), பாகிஸ்தான் - மலேசியாவையும் (4-1) வென்றன. சீனா - வங்கதேசம் ஆட்டம் டிரா (1-1) ஆனது.
தற்போது குரூப் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், குரூப் ஏ-வில் இந்தியா 12 புள்ளிகளுடன் முதலிடமும், ஜப்பான் 9 புள்ளிகளுடன் 2-ஆம் இடமும் பிடித்து அரையிறுதிக்குத் தகுதிபெற்றன. தென் கொரியா(6), தாய்லாந்து (3), சீன தைபே (0) அணிகள் வெளியேறின.
அதேபோல், குரூப் பி-யில் பாகிஸ்தான் (12), மலேசியா (7) ஆகியவை அரையிறுதிக்கு முன்னேறின. வங்கதேசம் (5), சீனா (4), ஓமன் (0) அணிகள் வெளியேற்றப்பட்டன. அடுத்ததாக அரையிறுதியில், இந்தியா - மலேசியா, பாகிஸ்தான் - ஜப்பான் அணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 3) மோதுகின்றன.