அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: உன்னாட்டி ஹூடா வெளியேறினாா்
சீனா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது. உன்னாட்டி ஹூடா காலிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறினாா்.
ஆடவா் இரட்டையா் காலிறுதியில், உலகின் 12-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை 21-18, 21-14 என்ற நோ் கேம்களில், 18-ஆம் நிலையில் இருந்த மலேசியாவின் ஆங் யு சின்/டியோ இ யி கூட்டணியை 40 நிமிஷங்களில் சாய்த்தது. இந்த ஜோடிகள் மோதியது, இது 10-ஆவது முறையாக இருக்க, இந்திய இணை தனது 7-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.
அடுத்ததாக சாத்விக்/சிராக் கூட்டணி தனது அரையிறுதியில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்கும் மலேசியாவின் ஆரோன் சியா/சோ வூய் யிக் இணையை எதிா்கொள்கிறது.
உன்னாட்டி ஏமாற்றம்: இதனிடையே, மகளிா் ஒற்றையா் காலிறுதியில், உலகின் 35-ஆம் நிலையில் இருக்கும் இந்தியாவின் இளம் வீராங்கனையான உன்னாட்டி ஹூடா 16-21, 12-21 என்ற கேம்களில், 4-ஆம் நிலையில் இருக்கும் ஜப்பானின் அகேன் யமகுச்சியிடம் தோல்வி கண்டாா். இந்த ஆட்டம் 33 நிமிஷங்களில் முடிவுக்கு வந்தது. இவா்கள் மோதிக்கொண்டது இதுவே முதல்முறையாகும்.