அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது: ஆர்.எஸ். பாரதி
சென்னை: அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஒரு புல்லைக் கூட பிடுங்க முடியாது என்று சென்னையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆர்.எஸ். பாரதியிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
தமிழகத்தில் பாஜக ஆட்சி மலர்ந்தே தீரும் என்று அண்ணாமலை கூறியிருப்பது குறித்து கேட்டதற்கு, அது அவரது கற்பனை என்று பதிலளித்தார் ஆர்.எஸ். பாரதி.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று சென்னையில் நடைபெற்ற அக்கட்சியின் பொதுக் கூட்டத்தில் திமுக குறித்துப் பேசுகையில், அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுத்துவிட்டுத்தான் போவேன் எனப் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அண்ணா அறிவாலயத்தில் இருக்கிற ஒரு புல்லைக் கூட அண்ணாமலையால் பிடுங்க முடியாது. தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமையும் என்பது நிச்சயமாக ஒரு கற்பனை, அது நடக்கவே நடக்காது என்பது ஊரறிந்த உண்மை என்று பதிலளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, ஒரே மேடையில் விவாதிக்க நாங்கள் தயார். எங்களுடன் விவாதிக்க அண்ணாமலை தயாரா? என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதிமுகவைப் பற்றி கேட்க வேண்டாம். ஏனென்றால் அவர்களே பாவம் நெருக்கடியில் இருக்கிறார்கள். அதிமுகவில் இருக்கும் யாரைப் பற்றியும் நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என்று கூறினார் ஆர்.எஸ். பாரதி.
அடுத்தடுத்த கேள்விகளுக்கு, ஸ்டிக்கர் ஒட்டியது யார் என்பது உங்களுங்ககேத் தெரியும். நடிகர் விஜய்க்கு 15 முதல் 20 சதவீத வாக்கு வங்கி இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்.
மேலும், பிரசாந்த் கிஷோர் பற்றி கேட்டதற்கு, பிரசாந்த் கிஷோரே பிகாரில் டெபாசிட் வாங்கவில்லை என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.