செய்திகள் :

2,738 ரோஜாக்கள்.. ஈபிள் கோபுரம்..! பாரீஸ் ஒலிம்பிக்கில் பற்றிய காதல் சுடர்!

post image

காதல் என்பது ஏதோ அந்நிய உணர்வாக பலரும் நினைத்துக்கொண்டிருந்தாலும், அது சாமானியர் முதல் சாதனையாளர்கள் வரை அனைவரையும் உரசிச் சென்று அவர்களது வாழ்வில் ஒரு புது அத்தியாயத்தை எழுதத்தான் செய்கிறது.

இரண்டு பேர் மனதோடு மனதாக ஒன்றிணைந்து காதல் வயப்பட்டு, முடிவில் குடும்பமாக, குழந்தைகளை பெற்றுக் கொள்வது தான் காலம் காலமாக காதலுக்கான இலக்கணமாகவும் இருக்கிறது.

வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காதல் என்ற உணர்வு ஏதாவது ஒரு தருணத்தில் ஏற்பட்டிருக்கும். அப்படி நாம் உணருகிற தருணமும் அன்பின் மிகுதியால் இரு மனங்கள் இணையும் அழகான அலாதியான உணர்வும் காதல்! அன்பு, நட்புக்கு அடுத்தபடியாக மனதால் இணையும் அந்த பந்தம் வாழ்க்கை முழுவதும் நீடிக்கிறது.

எவ்வாறாயினும், ஒருவன் காதலித்தாலே உருப்படமால் போய் விடுவான் என்று கூறுபவர்கள் மத்தியில் காதலித்து வாழ்க்கையில் உயர்ந்தவனைப் பற்றி யாரும் சிந்தித்துப் பார்ப்பதே கிடையாது. சரி.. ஒருவன் ஒரு பெண்ணை எப்படி முதல் அறிமுகத்திலேயே கவர்கிறனோ அப்போதுதான் அவனுக்கே காதல் என்னும் வாய்ப்பே கிடைக்கிறது. ஹார்மோன்கள் செய்யும் சித்து விளையாட்டில் காதல் என்னும் வலையில் சிக்காத மனம் கிடையாது.

அதுபோலவே, 2024 ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரான பிரான்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டியில் வீரர் மற்றும் வீராங்கனைகள் மிகப் பிரமாண்டமாய் தங்களது இணைகளிடம் காதலை வெளிப்படுத்திய விதம் காதலிக்காதவர்களையும் காதலிக்க வைத்துவிடும். அவற்றில் சில முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கு காண்போம்..

ரோஜா இதழே என் ராஜா மகளே..!

ஒலிம்பிக் தொடரில் படகுப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டீன் பெஸ்ட், தனது குழுவைச் சேர்ந்த 3 பேருடன் சேர்ந்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் படகுப் போட்டியில் தங்கம் வென்றதால் அந்த நிகழ்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. தங்கம் வென்றது ஒருபுறம் இருக்க அதைவிட மிக முக்கியமான நாளாக ஜஸ்டீனின் வாழ்வில் அந்த நாள் அமைந்தது. ஆம்.. அவர் தனது நீண்ட நாள் தோழியான லைனே ஒலிவியா டங்கனிடம், தனது காதலை அன்றுதான் வெளிப்படுத்தினார்.

ஜஸ்டின் பெஸ்ட் - லைனி டங்கன்

ஒரு காதலன் தனது காதலியிடன் தன்னுடைய காதலை வெளிப்படுத்துவதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம்.

அங்கு தான் இருக்கு ஜஸ்டீனோட ட்விஸ்ட்.. சும்மா பெயருக்கு தனது காதலை தெரிவிக்கவில்லை ஜஸ்டீன். பாரீஸின் மிக முக்கிய இடமான ஈபிள் கோபுரம் முன்பு அவரது காதலியை அழைத்து வந்தது மட்டுமல்லாமல், 2,738 மஞ்சள் ரோஜாக்களைக் கொண்டு அப்பகுதியை அலங்கரித்தார். ஈபிள் கோபுரம் முன்பு மஞ்சள் ரோஜாக்கள் சூழ தனது காதலை அவர் வெளிப்படுத்தினார்.

ஸ்னாப்சாட் என்னும் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமான தனது காதலிக்கு அவரைச் சந்தித்த நாள் முதல் அன்றைய நாள் வரை கணக்கிட்டு 2,738 மஞ்சள் ரோஜாக்களுக்கு அவர் ஏற்பாடு செய்துள்ளார். ஜஸ்டீன் பெஸ்ட் - லைனே ஒலிவியா டங்கனிடம் மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி காதலை வெளிப்படுத்திய தருணத்தை அந்நாட்டு ஊடகங்கள் நேரலையில் ஒளிபரப்பு செய்தது அனைவரையும் நெகிழச் செய்தது.

அலெஸாண்ட்ரோ ஓசோலா - அரியன்னா மந்தரடோனி

ஒருபுறம் ஒலிம்பிக்; அதுமுடிந்தவுடன் பாராலிம்பிக்.. நீங்க மட்டும்தான் லவ் பண்ணுவீங்களா? நாங்க பண்ண மாட்டோமா என இத்தாலி வீரர் ஒருவர் தனது நீண்ட நாள் தோழியிடம் காதலை வெளிப்படுத்த, அந்தத் தருணமும் இணையதள உலகில் சிறிது நாள்கள் வலம் வந்துகொண்டிருந்தது காதலர்களின் உணர்வுப்பெருக்குடன்.

ஆடவருக்கான ஓட்டப் பந்தயத்தின் இறுதிப் போட்டியில் இத்தாலி வீரர் அலெஸாண்ட்ரோ ஓசோலா கலந்துகொண்டு தோல்வி அடைந்தார். அந்தப் போட்டியில் தங்கம் வென்றிருந்தால்கூட மறந்திருப்பார் அலெஸாண்ட்ரோ, எனினும் அவருக்கு அந்த நாள் மறக்க முடியாத நாளாகவே மாறியது.

மகிழ்ச்சி வெள்ளத்தில் அலெஸாண்ட்ரோ ஓசோலா, காதலி அரியன்னா மந்தரடோனி

பார்வையாளர்கள் அரங்கில் இருந்த தனது நீண்ட நாள் தோழியான அரியன்னா மந்தரடோனியிடம் வந்து மண்டியிட்டு மோதிரத்தை நீட்டி தனது காதலை வெளிப்படுத்தினார். ‘நீங்கள் வேடிக்கையான மனிதர்’ என்று அரியன்னா கூற, இவர் காதலை ஏற்றுக்கொள்வாரா? மாட்டாரா? என அலெஸாண்ட்ரோ ஓசோலாவைப் போலவே அங்கிருந்த பார்வையாளர்களும் காத்திருந்தனர். ஒருவழியாக ஓசோலாவின் காதலை ஏற்றுக்கொண்டார் அரியன்னா. பின்னர் இருவரும் தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக்கொண்டனர்.

இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான அலெஸாண்ட்ரோ ஓசோலா, இருசக்கர வாகன விபத்தின்போது தனது மனைவியை இழந்தவர். அந்த விபத்தில் அவர் தன்னுடைய இடது காலையும் இழந்தார். தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றுவந்த அவர், தற்போது தனது நீண்ட நாள் தோழியான அரியன்னாவிடம் காதலை வெளிப்படுத்தியது காதலுக்கு எல்லைகளே இல்லை என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

யா கியூயாங்க் - லியூ யூசென்

சீன பாட்மின்டன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் சீனாவின் யா கியூயாங் ஹுஆங் – செங் சிவெய் ஜோடியும், கொரியாவின் சியோ சியூங் ஜே – சா யூ ஜூங் ஜோடியும் மோதிய ஆட்டத்தில் சீன ஜோடியான யா கியூயாங் ஹுஆங் – செங் சிவெய் இருவரும் தங்கப்பதக்கத்தை வென்றனர்.

யா கியூயாங்க் - லியூ யூசென்

தங்கப் பதக்கத்தை வென்ற உற்சாகத்தில் இருந்த சீன வீராங்கனை யா கியூயாங்கிடம் அவருடன் இத்தொடரில் பங்கேற்ற சக வீரரான லியூ யூசென் தனது காதலை வெளிப்படுத்தினார்.

பதக்கம் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு வெற்றிக்களிப்பில் இருந்தவரிடம், மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தி, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி மோதிரத்தை நீட்டினார். இதனை சற்றும் எதிர்பாராத, யா கியூயாங் ஆரம்பத்தில் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினார்.

அவரின் காதலை ஏற்றுக்கொள்வதை குறிப்பிடும் வகையில், மோதிரத்தை அணிவித்துவிடுமாறு தனது விரல்களை நீட்டியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

சாரா ஸ்டீயர்ட் - சார்லின் பிகான்

சாரா ஸ்டீயர்ட் - சார்லின் பிகான்

காதலுக்கு கண் மட்டுமல்ல... இனம், மொழி, பாகுபாடு, நிறம் என எந்தக் கொள்கையோ, கோட்பாடோ கிடையாது. அது போல தன்பாலின ஈர்ப்பாளர்களும், பிரெஞ்சு துடுப்பு படக்கோட்டி வீராங்கனைகளுமான சாரா ஸ்டீயர்ட் மற்றும் சார்லின் பிகான் இருவரும் பாரீஸ் ஒலிம்பிக்கின்போதே தங்கள் காதலை வெளிப்படுத்தினர். வெண்கலப் பதக்கம் வென்று கரை திரும்பிய இருவரும் தங்களது காதலை பரிமாறிக்கொண்டனர்.

'மம்மா டீம்' என்று அழைக்கப்பட்ட இந்த ஜோடி கரைக்கு வந்தபோது பிரெஞ்சு ரசிகர்களும் அவர்களது குடும்பத்தினரும் உற்சாக வரவேற்பு அளித்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

பாப்லோ சிமோனெட் - மரியா காம்பாய்

பாப்லோ சிமோனெட் - மரியா காம்பாய்

ஒலிம்பிக் தொடக்க விழாவிற்கு முன்பாக, ஆர்ஜென்டீனாவின் ஆடவருக்கான ஹேண்ட்பால் அணியின் பாப்லோ சிமோனெட், தனது காதலியான பெண்கள் ஹாக்கி அணியின் வீராங்கனை மரியா காம்பாயிடம் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஹேண்ட்பால் மற்றும் ஹாக்கி அணிகள் குழு புகைப்படத்திற்காக கூடும்போது, சிமோனெட் அவரது காதலியான காம்பாய்யிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டார். இந்தக் காதலுக்கு அவர் ஆம்.. என்று கூறியதும், அவர்களது அணி வீரர்கள் உற்சாகப்படுத்தினர். ​​அவர்கள் இருவரும் கண்ணீருடன் தழுவிக்கொண்ட காட்சிகள் இணையத்தையே இன்ப மழையில் நனையவைத்தன.

பாப்லோ சிமோனெட் - மரியா காம்பாய்

பேட்டன் ஓட்டர்டால் - மேடி நில்லெஸ்

அமெரிக்காவின் குண்டுஎறிதல் வீரரான பேட்டன் ஓட்டர்டால் போட்டியில் நான்காவது இடத்தைப் பிடித்து பதக்கத்தைத் தவறவிட்டார். ஆனால், அவர் தனது காதலி மேடி நில்ஸை தவறவிடவில்லை. உலகப் புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தின் அடியில் மோதிரத்துடன் தனது காதலை வெளிப்படுத்தினார்.

ஆலிஸ் ஃபினோட் - புருனோ மார்டினெஸ் பார்கீலா

ஆலிஸ் ஃபினோட் - புருனோ மார்டினெஸ் பார்கீலா

3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் ஓட்டப்பந்தயத்தில் பதக்கத்தைத் தவறவிட்ட ஆலிஸ் ஃபினோட், ஆட்டத்தின் முடிவில் சிரித்த முகத்துடன் பார்வையாளர் அரங்கை நோக்கி நகர்ந்தார். அவர் எங்குச் செல்கிறார் எனப் பார்த்திருந்த பார்வையாளர்கள் மத்தியில் தனது காதலன் புருனோ மார்டினெஸ் பார்கீலாவிடம் தன் கையில் வைத்திருந்த மோதிரத்தை நீட்டி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலை வெளிப்படுத்தினார்.

அவரது மோதிரத்தில் “காதல் பாரீஸில் இருக்கிறது” (Love is in Paris) என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், அந்த அரங்கில் கூடியிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

அலெசியா மௌரெல்லி - மாசிமோ பெர்டெல்லோனி

அலெசியா மௌரெல்லி - மாசிமோ பெர்டெல்லோனி

இத்தாலியைச் சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான அலெசியா மௌரெல்லி வெண்கலப் பதக்கம் வென்ற பிறகு, அவரின் காதலர் மாசிமோ பெர்டெல்லோனி அவரின் முன் மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்தியது பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது.

பிரபலங்களின் காதல் திருமணம்!

நடிகர் அஜித் குமார் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா வரிசையில் லேட்டஸ்ட்டாக பல திரையுலகப் பிரபலங்கள் திருமண வாழ்வில் இணைந்திருக்கிறார்கள்.திருமணம் என்றாலே கொண்டாட்டம் நிறைந்ததாகத்தான் இருக்கும். அதிலும் காதல... மேலும் பார்க்க

காதல் வருவது எப்படி?

அந்த இருவருக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்கிறது என்று சொல்வார்கள். ஆனால் அது வெறும் சொற்றொடர் அல்ல. உண்மையிலேயே, இரண்டு பேர் காதலை உணரும்போது, இருவருக்குள்ளும் நிகழும் உண்மையான வேதியியல் மாற்றத்தைத... மேலும் பார்க்க

வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் காவியங்கள்..!

உலகமே எதிர்த்து நின்றாலும் காதலும், காதல் காவியங்களும் எப்போதும் அழியாதவை. ஒவ்வொருவரது வாழ்விலும் திருப்புமுனையாக அமைவது காதல்தான். அது சிலரது வாழ்க்கையை உச்சத்துக்குக் கொண்டு செல்லும், ஒரு சிலரது வாழ... மேலும் பார்க்க

பிக் பாஸில் மலர்ந்த காதல்கள்!

காதலர்களுக்கு ஏதுங்க தினம்? தினம் தினம் காதலர் தினம்தான் என்று காதலர்கள் சொல்லலாம். ஆனால், காதலை வெளிப்படுத்தவும் அதனை ஏற்றுக்கொள்ளவும் ஒரு நாள் என்பதால் உலகம் முழுவதும் இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்... மேலும் பார்க்க