'காதல்' என்கிற பேருணர்வு
நீங்கள் காதலிக்கும்போது உங்கள் மூளையில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? அறிவியல் ஆய்வாளர்கள், நரம்பியல் நிபுணர்கள் ஆய்ந்து ஆய்ந்து, அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்திருக்கிறார்கள். காதல் என்பது ஒரு உயிரியல் தேவை. அது பசி, தாகம்போல நமது வாழ்விற்குத் தேவைப்படுவது.
'செயல்பாட்டுக் காந்த அதிர்வு இமேஜிங்' என்கிற ஆய்வின் மூலம், நமது நடு மூளையில் உள்ள பகுதியில் (மிட்பிரைனின் வென்ட்ரல் டெக்மன்டல் பகுதியில்) நடக்கிற வேதி வினைகள்தான் இந்தக் காதல் என்கிற மகிழ்ச்சிகரமான உணர்வு. தாகமாக இருக்கும்போது குடிப்பது, பசிக்கும்போது சாப்பிடுவது போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தொடர்புடைய இடத்தில், டோபமைன், ஆக்ஸிடோன், மற்றும் அட்ரினலின் போன்ற வேதிப்பொருள்கள் வெளியிடுவதைக் கண்டறிந்திருக்கிறார்கள். இது ஒரு மகிழ்ச்சியான நோக்க உணர்வைத் தூண்டுகிற வேதி வினைகளாம். இதுதான், இப்படித்தான் மனிதக் கூட்டத்திற்கு காதல் வந்து சேர்ந்த விதம்.
ஆனால் நமக்கோ...? பொதுப்புத்தியில் போதிக்கப்பட்டது என்ன? ஆண்டவர் ஆதியில் ஆதாமைப் படைத்தார். அந்த ஆதாமின் விலாஎலும்பிலிருந்து ஏவாளைப் படைத்தார். பின் அந்த ஆதாமும் ஏவாளும் காதல் புரிந்த கதைகள். விலக்கப்பட்ட ஆப்பிள்களின் கதையாடல்கள் என ஒரு நீண்டதொரு புராணிக வைதிகக் கதையாடல்களுக்குள் வனையப்பட்டுள்ள, பிணிக்கப்பட்டுள்ள, பிணையப்பட்டுள்ள, பிசைந்துவைக்கப்பட்டுள்ளவைகள்தாம் நம் மூளை. உணர்வு, உணர்ச்சிகள் எல்லாம். இந்த மதக் கற்பனைக் கதையாடல்களில் கிறிஸ்தவம், இந்துத்துவம், இசுலாமியம் என எந்த மதத்திற்கும் பேதமில்லை. சாரத்தில் எல்லா மதங்களும் ஒன்றுபோலவே வினையாற்றுகிறது, வினையாற்றிவருகிறது.
மனித குலத்தின் உடற்தேவைகளுள் ஒன்றாக இயல்பாக எழும் இந்தத் உணர்வுகளை, உணர்ச்சிகளைத்தான் பல்வேறு கற்பனைகளோடு, கற்பிதங்களோடு போதித்திருக்கிறது. நமது இலக்கியங்கள், புராணங்கள், கதைகள், கதையாடல்கள். இத்தகைய பெருங்கதையாடல்கள் நமது ஒட்டுமொத்தச் சமூகத்தையே வேறுவிதமாகப் மடைமாற்றியிருக்கிறது. திசை மாற்றியிருக்கிறது.
காதல் என்கிற இயல்பெழுச்சிகளின் ஊடே பொங்கிப் பிரவகிக்கும் இந்த உணர்வுகைள, மகிழ்வூட்டுகிற இந்த உணர்ச்சித் தருணங்களை, நிலவும் தனிவுடைமைக் கூறுகள், ஆணாதிக்கக் கூறுகள், அதனோடு ஆழமாக வேர் விட்டுப் பின்னிப் பிணைந்து இறுகப்பற்றிக் கொண்டுள்ள சாதி போன்ற சமூக நோய்களின் வளமான விளைச்சல் காடாகிப்போயுள்ளது இந்தக் காதல்.
அழகான இயல்பான மகிழ்வூட்டுகிற இந்தக் காதல், தற்போது கொடூரமான பாரதூர விளைவுகளுக்கு மனித குலத்தை, குறிப்பாக நமது இந்தியச் சமூகத்தை, தமிழ்ச் சமூகத்தை இட்டுச் சென்றுள்ளது. ஒத்த இருபாலருக்குள் இயல்பாய்ப் பூக்கும், எழும் இந்த உணர்வை, சாதி ஆணவக் கொலைகள் சுக்கு நூறாகப் பிய்த்து எறிந்திருக்கிறது. ஒத்த இரு மனங்களுக்குள் இயல்பாய் முகிழ்க்கும் இந்த உறவை கர்ண கொடூமாய்க் கொன்றொழித்து கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இங்கு இருப்பவன், இல்லாதவன் என்கிற வர்க்கப் பேதங்களைவிட, 'நான் மேல், நீ கீழ்' என்கிற சாதியம் அழித்தொழித்திருக்கிறது. ஆக, இங்கு வர்க்க பேதங்களைவிட சாதியே அதிகமாகத் தொழிற்படுகிறது.
காதல் என்கிற உன்னதமான பேருணர்வு ஒருவரின் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டாலும், அதனைக் கொண்டாடும் விதமாக பொதுவான ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து, முன்னிறுத்தி, அடையாளப்படுத்திக் கொண்டாடி வருகிறோம். எல்லாவற்றையும்போல இதற்கும் வரவேற்புகள், எதிர்ப்புகள் என இரு வேறுபட்ட நிலைகள். ஐந்து ரூபாய் வாழ்த்து அட்டையோ? அல்லது ஐந்து லட்ச ரூபாய் பரிசுப் பொருளோ? எதுவாகிலும் விற்பனை வணிக வியாபாரிகள் தம் லாபத்தை ஊதிப் பெருக்கும் உபாயமாய்க் காதலர் தினத்தை வரவேற்கிறார்கள். காதலர்களை வட்டமிடுகிறார்கள். காதலுற்றவர்களிடம் கூவிக் கூவி விற்பனை செய்து அவர்களைத் தமக்கான வாடிக்கையாளர்களாக்கிக் கொள்கிறார்கள்.
மற்றொருபுறம் நெற்றியில் மேல் நோக்கித் நீட்டப்பட்ட காவித் தீற்றலோடும், தலையில் கட்டப்பட்ட காவித் துண்டோடும், கையில் தாலியுடன், இந்து சநாதன தர்மத்தை எப்பாடு பட்டேனும் என்ன விலை கொடுத்தேனும் பாதுகாத்திட வேண்டும் என எதிர்ப்புக் குரல் கொடுத்து அலைந்து திரிகிறார்கள் காவிக் கலாச்சார இந்துத்துவக் காவலர்கள்.
அதேசமயம் இதனை வரவேற்கும்விதமாக காதல் கொண்டாடப்பட வேண்டியது என்று முற்போக்காளர்களும், சாதியை அழித்தொழிக்கும் வழிகளில் இதுவும் ஒன்று என புரட்சியாளர்களும் மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டக் களங்களைக் கட்டமைக்கிறார்கள்.
காதல், சாதியை... அதன் இருப்பை... கேள்விக்குள்ளாக்கிடும். காதல் என்கிற பேருணர்வு அந்தச் சாதிச் சனியனைச் சட்டென்று தூக்கி எறிந்து மேற் சென்றுவிடும். எனவேதான் நாம் தீர்க்கமாகச் சொல்கிறோம். சாதியை அழித்தொழிக்கும் வழிகளில் முகாமையானது இந்தக் காதல் மற்றும் காதல் திருமணங்கள். சாதி ஆணவக் கொலைகளைக் களைந்திடும் ஆற்றல் கொண்டது இந்தக் காதல் திருமணங்கள். சாதி ஆணவக் கொலைகள் என்கிற காட்டு விலங்காண்டி நிலையை மாற்றி உண்மையானதொரு நாகரீகமான சமூகத்தை உருவாக்க வேண்டும்மென்றால், நாம் காதல் தினம் போன்ற மாற்றுப் பண்பாட்டுக் கொண்டாட்டக் களங்களை இம் மண்ணில் வெகு தீவிரமாக முன்னிலும் வலுவாகக் கட்டமைக்க வேண்டும்.
நிலவும் அவலத்தை மாற்ற, சரியான மாற்று என்பது, அதுவொன்றுதான். அதுவொன்றேதான். காதலர் தினத்தை, காதலர் தினக் கொண்டாட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக, நாம் கொஞ்சம் கொஞ்சமாக சாதியின் இயங்கு தளங்களை உள்ளுக்குள்ளேயே தகர்த்து, உடைத்து, பின்னர் உதிர வைக்க முடியும். இயலும் என்பதே சரியான முடிவு. தீர்வு.