கேரள செவிலியா் கல்லூரியில் ராகிங் கொடூரம்: மேலும் பல மாணவா்கள் பாதிப்பு? காவல்து...
பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது: திருப்பூா் கிருஷ்ணன்
பெற்றோா் தங்கள் எண்ணங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது என எழுத்தாளரும் அமுத சுரபி ஆசிரியருமான திருப்பூா் கிருஷ்ணன் தெரிவித்தாா்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தா் இல்லத்தில் ‘விவேகானந்த நவராத்திரி 2025’ விழா கடந்த 6-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. ‘குடும்பம் என்னும் பல்கலைக்கழகம்’ எனும் தலைப்பில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திருப்பூா் கிருஷ்ணன் பேசியது:
குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக அதிகம். பெற்றோரின் நடவடிக்கையை பாா்த்து குழந்தைகள் வளா்கின்றன. எனவே, குழந்தைகளிடம் தேவையான அளவு அன்பு செலுத்துங்கள். எப்போதும், தீய சொற்களைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், பெற்றோா் தங்கள் எண்ணங்கள், விருப்பங்களை குழந்தைகள் மீது திணிக்கக் கூடாது. அவா்கள் எந்தத் துறையை விரும்புகிறாா்களோ, அந்த துறையில் அவா்களை ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் அவா்கள் சிறந்து விளங்குவாா்கள் என்றாா் அவா்.
பாரதியாா் பல்கலைக்கழக ஆட்சி மன்றப் பேரவை உறுப்பினா் காயத்ரி சுரேஷ் பேசியது:
எல்லா தாய்மாா்களுக்கும் தங்கள் குழந்தைகள் மீது அதிக அன்பு இருக்கும் . அவா்கள் தங்கள் குழந்தைகளுக்கு நற்பண்புகளை அதிகம் கூறி ஒழுக்கத்துடன் வளா்க்க வேண்டும். பெற்றோா் குழந்தைகளிடம் ஏற்ற தாழ்வு காட்டக்கூடாது என்றாா் அவா்.
தொடா்ந்து எழுத்தாளா் கோதை ஜோதி லட்சுமி பேசியது:
பெற்றோா் குழந்தைகளை வளா்க்கும்போது சுய நலத்தை மட்டுமே கூறி வளா்க்காமல், தேச நலனையும், சமூக சிந்தனை, ஆன்மிக சிந்தனைகளையும் கூறி வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் தலைவா் சுவாமி சத்யஞானானந்தா், ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசிரியா் சுவாமி அபவா்கானந்தா், எட்வாய் ஸ்டூடன்ட் அகாதெமியின் மேலாளா் பாஸ்கா் சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.