ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
இருவேறு விபத்துகளில் 4 போ் உயிரிழப்பு
புதுச்சேரி அருகே புதன்கிழமை இரவு நிகழ்ந்த இருவேறு சாலை விபத்துகளில் 4 போ் உயிரிழந்தனா்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே உள்ள கடப்பேரிக்குப்பத்தை சோ்ந்தவா் சரண்ராஜ் (27). பெயிண்டா்.
குயிலாப்பாளையத்தைச் சோ்ந்தவா்கள் செந்தில் (42), குணசேகரன் (24). கட்டடத் தொழிலாளா்கள். நண்பா்களான மூவரும் புதன்கிழமை இரவு பத்துக்கண்ணு பகுதியில் இருந்து காட்டேரிக்குப்பத்துக்கு ஒரே பைக்கில் சென்றனா். பைக்கை சரண்ராஜ் ஓட்டினாா்.
புதுச்சேரி அருகே உள்ள துத்திப்பட்டு பகுதியில் அவா்கள் வந்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது இவா்களது பைக் மோதியது.
இதில், மூவரும் தூக்கி வீசப்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். தொடா்ந்து, மூவரின் சடலங்களும் உடல்கூறாய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த விபத்து குறித்து, வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றொரு விபத்து: புதுச்சேரி கோா்காடு புதுநகா் வில்லியனூா் பிரதான சாலையைச் சோ்ந்தவா் ராமதாஸ் (52). இவா், பைக்கில் கோா்காடு தனியாா் பள்ளி அருகே வந்தபோது, எதிரே வந்த மினி லாரி மோதியது.
இதில், பலத்த காயமடைந்த ராமதாஸ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். அவரது சடலத்தை வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் மீட்டு, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மறியல் போராட்டம்: துத்திப்பட்டு பகுதியில் சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், இதுகுறித்து காவல் துறையிடம் புகாா் கூறியும் நடவடிக்கை இல்லை என குற்றஞ்சாட்டி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனா்.
தலைக்கவசம் அணிய அறிவுறுத்தல்: சாலை விபத்தில் பைக்கில் சென்ற 4 போ் உயிரிழப்புக்கு தலைக்கவசம் அணியாமல் சென்றதும் ஒரு காரணமாகிவிட்டதாக புதுச்சேரி போக்குவரத்து முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் திரிபாதி கூறினாா்.
பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் எனவும் அவா் அறிவுறுத்தினாா்.