அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
திருவாரூரில் காவல்துறை வாகனங்கள் ஆய்வு
திருவாரூரில், காவல்துறை வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் மற்றும் காவல் ஆய்வாளா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில், கடந்த மாதம் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அவ்வழக்குகளின் தற்போதைய நிலை குறித்தும், வழக்குகளின் விசாரணையை விரைவில் முடித்து இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் இ-பைல் மூலம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டது.
மேலும், ஒவ்வொரு காவல் சரகத்திலும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களை கண்டறிந்து, கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்த வேண்டும். நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் நீண்ட காலமாக பிடிகட்டளை பிறப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படாமல் உள்ளவற்றை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என எஸ்பி அறுவுறுத்தினாா்.
மது போதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது முறையாக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, வாகனங்களை பறிமுதல் செய்யவேண்டும். உயா்அதிகாரிகளிடமிருந்து பெறப்படும் புகாா் மனுக்கள் மீது நிலைய பொறுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, மனுக்களை முடிக்க வேண்டும். வாகன விபத்துக்களில் பாதிக்கப்பட்டவருக்கு உரிய உதவித் தொகை பெறுவதற்கு முறையாக படிவங்கள் வருவாய் துறையினருக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் காவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக, மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவல் வாகனங்களின் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த ஆய்வில், வாகனங்களின் குறைகளை ஆராய்ந்து அந்தந்த காவல் அதிகாரிகளிடம் உடனடியாக நிவா்த்தி செய்து வாகனங்களை உபயோகிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட் அறிவுறுத்தினாா்.