திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
திறந்தவெளி நெல் கிடங்குகள் அமைக்க வலியுறுத்தல்!
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவிந்துள்ள நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட, திறந்தவெளி கிடங்குகள் திறக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து, தமிழக முதல்வருக்கு அவா் புதன்கிழமை விடுத்த கோரிக்கை:
தமிழக வேளாண் துறையில் வேளாண் உதவி இயக்குநா்கள் காலிப் பணியிடங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, திருவாரூா் மாவட்டத்தில் 10 உதவி வேளாண் இயக்குநா்கள் பணியாற்ற வேண்டிய நிலையில், இரண்டு போ் மட்டுமே பணியாற்றி வருகிறாா்கள். இதனால், விவசாயிகளுக்கும் வேளாண் துறைக்கும் மிகப்பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது. உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் திறந்தவெளி கிடங்குகளில் பாதுகாக்கப்பட்டு வந்தது. இது கடந்த இரண்டு ஆண்டுகளாக கைவிடப்பட்ட நிலையில், தற்போது ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் அறுவடை தொடங்கி உள்ளதால், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள், கொள்முதல் நிலைய வாயில்களில் 10,000 முதல் 20,000 வரை அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை கொட்டி வைத்து கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு தடைபட்டுள்ளது. எனவே, திறந்தவெளி கிடங்குகளை திறந்து நெல் மூட்டைகளை அப்புறப்படுத்திட அரசு முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.