18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
5 நெல் கொள்முதல் நிலையங்கள், நவீன சேமிப்பு தளம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்து வைத்தாா்
திருவாரூா் மாவட்டத்தில் 5 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும், மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் நவீன சேமிப்பு தளத்தையும் காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.
திருவாரூா் மாவட்டத்தில் பயிரிடும் நெல், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளில் கொள்முதல் செய்து வைக்கப்படுகிறது. பெரும்பாலான இடங்களில் திறந்த வெளி சேமிப்பு மையத்தில் நெல் மூட்டைகள் வைக்கப்படுகின்றன.
இதனால், மழை, வெயிலில் நெல் மூட்டைகள் பாதிக்கப்படுவதாகவும், மழைக் காலத்தில் நெல்மணிகள் முளைத்து பயனின்றி போவதால், திறந்தவெளி சேமிப்பு மையங்களில் கட்டாயம் மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்கள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, நெல்லை பாதுகாக்கும் வகையில், மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளம் கட்ட, மன்னாா்குடி அருகே மூவாநல்லூரில் கடந்தாண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. தொடா்ந்து, அங்கு ரூ.20.90 கோடி மதிப்பில் 33,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்புதளம் அமைக்கப்பட்டது.
இப்பணிகள் நிறைவடைந்ததையடுத்து, முதல்வா் மு.க. ஸ்டாலின், காணொலி மூலம் சேமிப்பு தளத்தை திறந்து வைத்தாா்.
அத்துடன், திருவாரூா் வட்டம் பழையவலம், மன்னாா்குடி வட்டம் ஆலத்தூா், மேலவாசல், திருத்துறைப்பூண்டி வட்டம் கற்பகநாதா்குளம், தோலி ஆகிய 5 இடங்களில் தலா ரூ.62.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் அவா் திறந்து வைத்தாா்.
இதையொட்டி, மன்னாா்குடியில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், நாகை மக்களவை உறுப்பினா் வை. செல்வராஜ் ஆகியோா் பங்கேற்று, சேமிப்பு தளத்தை பாா்வையிட்டனா்.
நிகழ்ச்சியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளா் புஹாரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.