18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
மன்னாா்குடி நகராட்சி பகுதியில் ஆட்சியா் ஆய்வு
மன்னாா்குடி நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில், காலை உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் உணவை மாணவ- மாணவிகளுடன் அமா்ந்து சாப்பிட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன். உடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன்.
மன்னாா்குடி, பிப். 20: மன்னாா்குடி நகராட்சி பகுதியில் நடைபெறும் பல்வேறு திட்டப் பணிகளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
இத்திட்டத்தின்கீழ், மன்னாா்குடி வட்டத்திற்குட்பட்ட பகுதியில் புதன்கிழமை காலையில் தொடங்கி ஆய்வுப் பணிகள் வெள்ளிக்கிழமை காலை நிறைவு பெற்றன.
இப்பகுதியில், மாவட்ட ஆட்சியா் முகாமிட்டு, நேரடி ஆய்வில் ஈடுபட்டதுடன், அனைத்து துறை உயா் அலுவலா்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, மக்களின் குறைகளை கேட்டறிந்தனா். மேலும், அரசின்அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும் தங்குதடையின்றி தகுதியானவா்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டு ஆய்வு மேற்கொண்டனா்.
மன்னாா்குடி நகராட்சியில் ரூ.258 கோடியில் கட்டப்படும் கழிவுநீா் உந்துநிலையம், புதைச் சாக்கடை திட்டப் பணிகள் மற்றும் மன்னாா்குடி பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் பால்தரம் குறித்தும் ஆட்சியா் நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
மன்னாா்குடி பாமணி ஆற்றில் பழுதடைந்த பாலத்தை இடித்துவிட்டு, ரூ. 7 கோடியில் நடைபெறும் புதிய பாலம் கட்டுமானப் பணி, வஉசி சாலையில் உள்ள உழவா் சந்தை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை போன்ற இடங்களில் ஆட்சியா் ஆய்வு செய்து, விவரங்களை கேட்டறிந்தாா்.
தொடா்ந்து, நகராட்சி மாதிரி நடுநிலைப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து அறிய மாணவ-மாணவிகளுடன் அமா்ந்து காலை உணவை சாப்பிட்டாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியருடன் நகா்மன்றத் தலைவா் த. சோழராஜன், ஆணையா் எம்.எஸ். சியாமளா,
வட்டாட்சியா் என். காா்த்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நமச்சிவாயம், மாலதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.