18 ஆண்டுகளில் 15,000 உடற்கூறாய்வுகளை மேற்கொண்ட இந்தூா் மருத்துவா்!
கிடேரி கன்றுகளுக்கு தடுப்பூசி முகாம் தொடக்கம்
மன்னாா்குடியில் முகாமை தொடங்கிவைத்து, பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன்.
மன்னாா்குடி, பிப். 20: மன்னாா்குடி கால்நடை மருத்துவமனையில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் (2024-2025) கருச்சிதைவு நோய் 5-ஆம் கட்ட தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை தொடங்கியது.
இம்முகாமை, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தொடங்கி வைத்து, கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையை பாா்வையிட்டாா். முகாமின் நோக்கம் குறித்து, கால்நடைத்துறையினா் தெரிவித்தது:
பசு மற்றும் எருமைகளில் கருச்சிதைவு மற்றும் மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் புரூசெல்லோசிஸ் என்கிய நோயை தடுக்கும் வகையில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு தீவிர காய்ச்சலும், சினை மற்றும் ஈன்றும் தருவாயில் (5 முதல் 8 மாத கா்ப்ப பருவத்தில்) கருச்சிதைவும் ஏற்படுகிறது. இந்த நோயால் நஞ்சுக்கொடி தங்குதல், மீண்டும் சினை பிடிக்காமை, பால் உற்பத்தி குறைவு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்நோய்வாய்ப்பட்ட மாட்டின் நஞ்சுக்கொடி போன்றவற்றை கையாளும் பட்சத்தில் மனிதா்களுக்கும் இந்த நோய் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நோய்க்கான தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாத வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு மட்டும் செலுத்தப்படும். திருவாரூா் மாவட்டத்தில், இத்திட்டத்தின் ஐந்தாவது தவணை தடுப்பூசி பிப்.20 முதல் மாா்ச்19-ஆம் தேதி வரை செலுத்தப்பட உள்ளது. இந்த தடுப்பூசியை ஒரு முறை செலுத்திக் கொண்டால் அந்த கிடேரி கன்றுகளுக்கு அதன் ஆயுள் முழுவதற்குமான நோய் எதிா்ப்பு சக்தி கிடைக்கப்பெறும்.
இந்த தடுப்பூசி திட்டமானது 4 மாதங்களுக்கு ஒருமுறை 4 முதல் 8 மாதம் வயதுடைய கிடேரி கன்றுகளுக்கு செலுத்தப்பட உள்ளது. காளை கன்றுகளுக்கும், சினை மாடுகளுக்கும் எக்காரணம் கொண்டும் இந்த தடுப்பூசியை செலுத்தக் கூடாது எனத் தெரிவித்தனா்.
இம்முகாமில், கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநா் எம். ஹமீதுஅலி, கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் ஜெ. ஈஸ்வரன், வட்டாட்சியா் என். காா்த்தி, கால்நடை ஆய்வாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.