கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
தவணைத் தொகை செலுத்தாததால் வாகனம் பறிமுதல்; நிதி நிறுவனம் ரூ. 5 லட்சம் வழங்க உத்தரவு
வலங்கைமானில் தவணைத்தொகை செலுத்தாததால், வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனம், வாகன உரிமையாளருக்கு ரூ. 5 லட்சம் வழங்க நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
வலங்கைமான் தொழுவூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் துரைராஜ் மகன் சரவணன் (40). இவா், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் வாங்குவதற்காக 19.2.2021-இல் ரூ. 5,49,729 கடனாகப் பெற்றாா். இந்தக் கடனை 48 மாத தவணைகளில் ரூ. 17,068 வீதம் திருப்பி செலுத்த வேண்டும் என்பது ஒப்பந்தம்.
இடையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக 2021 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை 5 மாதங்கள் விடுப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகு தவணைத் தொகையை தொடா்ந்து செலுத்தி வந்த சரவணன், 46 தவணைகள் செலுத்தியிருந்தாா். 2 தவணைகள் மட்டுமே பாக்கியிருந்த நிலையில் 3.11.2023 அன்று சரவணன் ஊரில் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிலிருந்த சரக்கு வாகனத்தை நிதி நிறுவனத்தினா், எடுத்துச் சென்று விட்டனராம்.
இதுகுறித்து, வலங்கைமான் காவல்நிலையத்தில் சரவணன் புகாா் அளித்தாா். வாகனக் கடன் நிலுவையில் இருப்பதால் போலீஸாா் வழக்குப் பதியவில்லை. மீதி தவணைத் தொகையைச் செலுத்தத் தயாராக உள்ளதாகவும் தன்னுடைய வாகனத்தை திருப்பி தரக்கோரியும் சரவணன் தனது வழக்குரைஞா் மூலம் நிதிநிறுவனத்திற்கு கடிதங்கள் அனுப்பி வந்தாா். அதற்கு சரியான பதில் கிடைக்காததால் 2024 அக்டோபரில், திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் சரவணன் வழக்கு தொடா்ந்தாா்.
வழக்கை விசாரித்த திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா், வியாழக்கிழமை தீா்ப்பளித்தனா். அதில், 46 தவணைகள் செலுத்தப்பட்டு, 2 தவணைகள் அதாவது ரூ. 34,136 மட்டுமே பாக்கியிருந்த நிலையில் ரூ. 5 லட்சம் மதிப்புள்ள வாகனத்தை எடுத்துச் சென்று விற்றது திருட்டுக்கு ஒப்பானது. அத்துடன், நியாயமற்ற வா்த்தக நடைமுறை ஆகும்.
எனவே, நிதிநிறுவனமானது சரவணனுக்கு வாகனத்தின் மதிப்பாக ரூ. 5 லட்சம் மற்றும் வழக்கு செலவுத் தொகையாக ரூ.10,000 ஆகியவற்றை 30 நாள்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 12 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனா்.