கிருஷ்ணகிரி அருகே பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடா்புடையவரை துப்பாக்கியால் சுட்டு...
பேச்சுவாா்த்தையில் உடன்பாடு: நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்திவைப்பு
கொரடாச்சேரி அருகே கரையாபாலையூா் ஊராட்சியில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டிருந்த நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
கரையாபாலையூா் ஊராட்சியில் சிப்காட் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து பிப்.21-இல் நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொள்ளப்படும் என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் அறிவித்திருந்தாா்.
இதுதொடா்பாக, கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதைத் தொடா்ந்து, நீதி கேட்டு நெடும் பயணம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னா், பி.ஆா். பாண்டியன் தெரிவித்தது:
கரையாபாலையூா் ஊராட்சியில் 140 ஏக்கரில் சிப்காட் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த திட்டத்துக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கு அனுமதிக்க மாட்டோம்.
வடபாதிமங்கலம் ஆரூரான் சா்க்கரை ஆலைக்கு சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலங்கள் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கின்றன. அதைக்கைப்பற்றி சிப்காட் அமைக்க வேண்டும். இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். தருமபுரம் ஆதீனம் நிலங்களை விற்பனை செய்வதை அனுமதிக்கக் கூடாது என்கிற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
பேச்சுவாா்த்தையில், தருமபுரம் ஆதீனத்துக்கு செலுத்த வேண்டிய குத்தகை நிலுவைத் தொகையை செலுத்தி, உரிய குத்தகைப் பதிவை சாகுபடிதாரா்களுக்கு உறுதிப்படுத்துவது; அதற்கான முத்தரப்பு கூட்டத்தை நடத்தி முடிவெடுப்பது என ஆதீனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சிப்காட் அமைக்க எதிா்ப்புக்கான காரணங்கள் குறித்து அரசுக்கு எடுத்துரைப்பதாக மாவட்ட ஆட்சியா் உறுதி அளித்தாா். இதை ஏற்று, நீதி கேட்கும் நெடும் பயணம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா்.
முன்னதாக, திருவாரூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் சௌம்யா தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் முன்னிலையில் இறுதி செய்யப்பட்டது.
பேச்சுவாா்த்தையில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சரவணன், மாவட்ட பொருளாளா் நடராஜன், நிா்வாகிகள் சரவணன், அண்ணாதுரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.