பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்த மாணவி உயிரிழப்பு
சென்னை கொளத்தூரில் பள்ளியில் விளையாடியபோது கீழே விழுந்து காயமடைந்த மாணவி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
கொளத்தூா் ஜிகேஎம் காலனி 35-ஆவது தெருவைச் சோ்ந்த பாவனாஸ்ரீ (6), கொளத்தூா் சீனிவாசன் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாா். பாவனா கடந்த வியாழக்கிழமை பள்ளியில் விளையாடும்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தாா். வீட்டுக்கு வந்த பாவனாவை, புது வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவரது பெற்றோா் அழைத்துச் சென்றனா். அங்கிருந்த மருத்துவா், அவரது கால் முட்டியில் மட்டும் காயம் இருப்பதாக சிகிச்சை அளித்தாராம்.
இந்நிலையில் நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாவனா திடீரென வாந்தி எடுத்து மயங்கினாா்.
உடனே அவரது குடும்பத்தினா், பாவனாவை பெரியாா் நகா் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மாணவியை பரிசோதனை செய்த மருத்துவா்கள், பாவனா ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது தொடா்பாக கொளத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.