கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்!
நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்குகளுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடைப் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. இதுவரை 40% அறுவடைப் பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், திருவாரூா் மாவட்டத்தில் காளாச்சேரி , மேல பூவனூா் , செருமங்கலம் , பைங்காட்டூா் , மேலப்புதூா் உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த சில தினங்களாக விவசாயிகளிடம் அறுவடை செய்யப்பட்ட நெல் கொள்முதல் செய்யப்படுவதில்லை. ஏற்கெனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை திருவாரூா் நெல் சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லாமல், கொள்முதல் நிலையத்திலேயே வைத்துள்ளனா்.
மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. இவை திறந்தவெளியில் அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.
கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்குக்கு ஏற்றிச் சென்றால் மட்டுமே விவசாயிகளிடம் புதிய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும். எனவே, இதுகுறித்து நுகா்பொருள் வாணிபக் கழகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கடந்த ஒரு மாத காலமாக நெல் கொள்முதல் நடைபெற்றுவருகிறது. எனினும் கடந்தாண்டைவிட நிகழாண்டு நெல் மூட்டைகள் கொள்முதல் மிகவும் குறைந்துள்ளது. கடந்தாண்டு கொள்முதல் நிலையங்கள் திறந்த ஒரு மாத காலத்தில் சுமாா் 15,000 முதல் 20,000 முட்டைகள் வரை கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், நிகழாண்டு ஒரு மாதமாகியும் 7,000 முதல் 8,000 மூட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலேயே அடுக்கி வைக்கப்படுகின்றன. திறந்தவெளியில் வைக்கப்படுவதால் பனி, வெயில் காரணமாக நெல் மூட்டைகள் எடை குறைந்து நெல் வீணாகிறது. இவற்றை உடனுக்குடன் லாரிகள் மூலம் எடுத்துச் சென்றால் நெல் மூட்டைகளின் தேக்கத்தை குறைக்க முடியும்.
எனினும், கடந்த 10 நாட்களாக நெல் மூட்டைகளை எடுத்துச் செல்லும் லாரிகள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதனால் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் கிடக்கின்றன என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா்.
