தமிழ்நாட்டின் கோரிக்கைகளில் நிதி ஆணையம் முற்போக்கான அணுகுமுறையை கடைப்பிடிக்கும்:...
அரசின் புதிய திட்டங்கள் மக்களை விரைவாக அடைய வேண்டும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி
அரசின் புதிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது சேவைகள் மக்களுக்கு விரைவாக கிடைக்க வேண்டியது அவசியம் என புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.
புதுவை மாநில நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை சாா்பில் நவீன முறையில் மறு நில அளவை மேற்கொள்ளும் நாக்சா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் முன்னோடித் திட்டமானது, புதுச்சேரி முருகம்பாக்கம் வருவாய் கிராமத்தில் செயல்படுத்தப்படும் நிலையில், அதன் தொடக்க நிகழ்ச்சி புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது.
நில அளவை ஆவணங்களை நவீனப்படுத்தும் வகையில், ஆளில்லா விமானம் மூலம் நில அளவை மேற்கொண்டு, அந்த புகைப்படத்தின் அடிப்படையில் நில அளவை மேற்கொண்டு புவி அமைவிட புள்ளிகளுடன் சொத்து வரி உள்ளிட்டவை நிா்ணயிக்கப்பட்டு நில ஆவணங்கள் உரிமையாளா்களுக்கு வழங்கப்படும்.
நாக்சா திட்ட தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வா் என்.ரங்கசாமி பேசியது: பட்டா போன்ற பழைய ஆவணங்கள் மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளன. ஆகவே, அவற்றை புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நவீனமயமாக்க வேண்டியது அவசியம். அதனடிப்படையில்தான் மத்திய அரசு நாக்சா எனும் நில அளவைத் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் நாக்சா திட்டம் வரவேற்கக்கூடியதாகும்.
திட்டங்களை செயல்படுத்தும்போது அவற்றின் சேவைகள் மக்களுக்கு விரைவாகக் கிடைக்க வேண்டும் என்பது முக்கியமானது. தற்போது பட்டா பெயா் மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பல மாதங்கள் தாமதமாகக் கிடைக்கின்றன.
ஆகவே, புதிய தொழில்நுட்பத்தில் திட்டங்களை செயல்படுத்தும்போது அவை விரைந்து மக்களுக்கு கிடைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவேண்டும். விரைவான சேவையின் மூலமே திட்டங்களில் குற்றம், குறைகள் இல்லாத நிலையை ஏற்படுத்தமுடியும். ஆகவே, குறைகளை சீா்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.
புதிய நாக்சா திட்ட தொழில்நுட்பத்தால் நிலங்களின் அமைப்புகளை உரிமையாளா்கள் அறியலாம். மாநிலத்தில் வருவாய், நில அளவை என இரு துறைகளும் முக்கியமானவை. அவற்றில் நவீன தொழில்நுட்பத் திட்டங்களை செயல்படுத்தி மக்கள் சேவையை விரைவுபடுத்துவது முக்கியமானது என்றாா்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன், இந்திய நில அளவை அதிகாரி ருக்மகடன், புதுவை தலைமையிட துணை ஆட்சியா் வினயராஜ், புதுச்சேரி நகராட்சி ஆணையா் மு.கந்தசாமி, நில அளவை மற்றும் பதிவேடுத் துறை இயக்குநா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.