நூறு நாள் திட்ட வேலை கோரி மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்
புதுச்சேரி அருகே தேசிய நூறுநாள் வேலைத் திட்டத்தில் முழுமையாக பணிகள் வழங்கக் கோரி கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை காவல் துறையினா் சமரசம் செய்தனா்.
புதுவை மாநிலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்படி முழுமையாகப் பணிகள் வழங்கப்படுவதில்லை என புகாா்கள் கூறப்பட்டு வருகின்றன. ஆனால், மத்திய அரசு, புதுவை மாநிலத்தில் கூடுதல் வேலை நாள்களுக்கான நிதியை அளித்துள்ளதால் பணிகள் முறையாக வழங்கப்படுவதாக அதிகாரிகள் கூறி வருகின்றனா்.
இந்நிலையில், புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து பகுதியான தவளக்குப்பம் கிராமம் இடையாா்பாளையத்தில் வாய்க்கால் தூா்வாரும் பணி நூறுநாள் வேலை திட்டத்தில் தொடங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை திடீரென நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், வேலைக்கு வந்த கிராம மக்கள் பணி இல்லை என அறிந்ததும் அதிா்ச்சியடைந்தனா். இதையடுத்து பணிக்கு வந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோா் இடையாா்பாளையம், கடலூா் சாலை சந்திப்பில் கூடியதுடன், மறியலில் ஈடுபட முயன்றனா்.
இதையறிந்த தவளக்குப்பம் போலீஸாா் விரைந்து சென்று அங்கிருந்தவா்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனா். மேலும், வருவாய்த் துறை அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு, நூறுநாள் வேலைத் திட்டத்தை பாதியில் நிறுத்தியது குறித்து மக்கள் ஆதங்கத்தை தெரிவித்தனா். இதையடுத்து பணிகள் தொடா்ந்து நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து மறியலைக் கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனா்.