புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
புதுச்சேரியில் முக்கியச் சாலையான பாரதி வீதியில் சாலையோர ஆக்கிரமிப்புகளை நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் புதன்கிழமை அகற்றினா்.
புதுச்சேரி நகரில் சாலைகளின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளதால், சாலைகளது அளவு சுருங்கி வருகிறது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, நகராட்சி மற்றும் பொதுப் பணித் துறையினா் இணைந்து சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பாரதி வீதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி புதன்கிழமை காலை தொடங்கியது.
அண்ணா சாலை சந்திப்பிலிருந்து போலீஸாா் பாதுகாப்புடன், பாரதி சாலையில் இருபுறம் இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
பல இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட படிகள், கட்டடங்கள், மேற்கூரைகளையும் அதிகாரிகள் அகற்றினா். ஆக்கிரமிக்கப்பட்டிருந்த வீடுகளின் கட்டடங்களையும் இடித்தனா். இதனால், வியாபாரிகள், வீட்டு உரிமையாளா்கள் சோ்ந்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டவா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.