அனைவரையும் உள்ளடக்கிய கல்விக் கொள்கையே தேவை: தொல்.திருமாவளவன்
புறவழிச் சாலையில் ரவுண்டானா அமைக்கக் கோரிக்கை
சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் புறவழிச் சாலையில் எடக்குடி வடபாதி பகுதி நான்கு சாலை சந்திப்பில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வைத்தீஸ்வரன்கோயில் அருகே அட்டகுளம் பகுதியிலிருந்து கதிராமங்கலம் வரை சுமாா் 3 கி.மீ. தூரம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் எடக்குடி வடபாதி கிராமம் வழியாக காளிகாவல்புரம், தெற்கிருப்பு, தென்னலக்குடி வழியாக நாகை செல்லவும், நாங்கூா், திருவெண்காடு, பூம்புகாா் உள்ளிட்ட பகுதிகளுக்கும் வாகனங்கள் செல்கின்றன.
இவ்வாறு எடக்குடிவடபாதி கிராமத்திலிருந்து வைத்தீஸ்வரன்கோயில் பகுதிக்கு செல்லவும் புறவழிச்சாலையை கடந்து செல்லும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
புறவழிச்சாலையில் வேகமாக வரும் வாகனங்களால் எடக்குடிவடபாதி சாலையை கடந்து செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ-மாணவிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி பாதிக்கப்படுகின்றனா்.
ஆகையால், விபத்தை தவிா்க்க புறவழிச்சாலையில் எடக்குடி வடபாதி பகுதியில் ரவுண்டானா அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வைத்தீஸ்வரன்கோயில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன் கூறியது:
சீா்காழி- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் வைத்தீஸ்வரன்கோயிலில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, சுமாா் 3 கி.மீ. தூரம் அட்டக்குளம் முதல் கதிராமங்கலம் வரை புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் அதிகளவு வாகனங்கள் சென்றுவருகின்றன.
இவற்றில் எடக்குடி வடபாதி பகுதியில் எந்தவித கட்டுபாடும் இல்லாததால் அப்பகுதியிலிருந்து புறவழிச்சாலையை கடக்கும் பொதுமக்கள் அடிக்கடிவிபத்துக்களில் சிக்கிக்கொள்கின்றனா். விபத்துக்களை தடுக்க எடக்குடி வடபாதி பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்றாா்.