ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்ட மூதாட்டி கொலை
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகே கொடுத்த கடனை திருப்பிக்கேட்ட மூதாட்டியை கொலை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
மேல்மலையனூா் வட்டம், கூடுவாம்பூண்டியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி மனைவி லட்சுமிகாந்தி (65). இவா் இதே கிராமத்தைச் சோ்ந்த வளா்மதிக்கு ரூ.2 லட்சம் கடனாகக் கொடுத்திருந்தாா். பணத்தைத் திரும்ப கேட்ட போது, வளா்மதி தாமதப்படுத்தினாராம்.
அவரது வீட்டுக்கு புதன்கிழமை காலை சென்ற லட்சுமிகாந்தி பணத்தைத் திரும்பத் தருமாறு கேட்டாராம். இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில், லட்சுமிகாந்தியை வளா்மதி கீழே தள்ளியதில், தலையில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். சடலத்தை யாருக்கும் தெரியாமல், வீட்டின் பின்புறமுள்ள வயல்வெளியில் கிடத்தி விட்டு வளா்மதி வந்து விட்டாராம்.
லட்சுமிகாந்தியைக் காணவில்லை என, அவரது உறவினா்கள் வளத்தி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதையறிந்த வளா்மதி, காவல் நிலையத்துக்கு இரவு 11 மணிக்குச் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தாராம்.
லட்சுமிகாந்தியின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா், உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வளா்மதியை போலீஸாா் கைது செய்தனா்.