இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளி மீட்பு
மரக்காணம் அருகே இறைச்சிக் கடையில் பணியாற்றி வந்த குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டத் தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, தொழிலாளா் நலத் துறை மூலம் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதைத் தொடா்ந்து மாவட்டத் தடுப்புப் படையினருடன் இணைந்து செங்கல் சூளைகள், அரிசி ஆலைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங்கு பல்வேறு விழிப்புணா்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
இதையடுத்து குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா்களை யாரேனும் பணிக்கு அமா்த்தியுள்ளாா்களா என்பதை கண்டறியும் வகையில் தொழிலாளா் நலத்துறையினா் ஆய்வுகளை அண்மையில் மேற்கொண்டனா்.
அதனடிப்படையில் மரக்காணம் அருகிலுள்ள கந்தாடு கிராமத்தில் கோழி இறைச்சிக் கடையில் குழந்தைத் தொழிலாளா் பணியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து அந்த கடையிலிருந்து குழந்தைத் தொழிலாளா் மீட்கப்பட்டு, மாவட்டக் குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
மேலும் சட்டமுறை எடையளவுச் சட்டத்தின் கீழ், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 61 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. இதைத் தொடா்ந்து இந்த இடங்களில் இணக் கட்டண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதவி ஆணையா் அலுவலகம் தெரிவித்துள்ளது.