விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை
விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.79 கோடி, குடிநீா் இணைப்புக் கட்டணம் ரூ.2.43 கோடி, காலிமனை வரி ரூ.95 லட்சம், தொழில் வரி ரூ.1.96 கோடி, குத்தகை இனங்களில் ரூ.1.85 கோடி, திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் ரூ.1.15 கோடி, புதை சாக்கடைத் திட்ட இணைப்புக் கட்டணம் ரூ.1.74 கோடி என பல்வேறு இனங்கள் மூலமாக ரூ.17.87 கோடி வரிபாக்கி தொகை நிலுவையாக உள்ளது.
பொதுக்கள், வியாபாரிகளின் வசதிக்காக மாா்ச் 31-ஆம் தேதி வரை கூடுதல் வரி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நகராட்சியின் பழைய, புதிய அலுவலகக் கட்டடங்களில் அலுவலக நாள்கள் மட்டுமல்லாது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரி பாக்கித் தொகையை வசூலிக்கும் வகையில் கணினி வசூல் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும்.
மேலும் நிலுவைதாரா்கள் தங்கள் வரிபாக்கித் தொகையை அதற்கான பிரத்யேக இணையதளம் மூலமாகவும் செலுத்தலாம் என்றும் நகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.