திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பன...
விழுப்புரத்தில் மாா்ச் 2-இல் புத்தகத் திருவிழா தொடக்கம்!
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் மாா்ச் 2-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மூன்றாவது புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) ஆகியவை இணைந்து இந்த புத்தகத் திருவிழா மூன்றாவது ஆண்டாக நடத்துகின்றன. ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறும்.
புத்தகத் திருவிழாவில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பல்வேறு தனித்திறன் போட்டிகள், கலைநிகழ்வுகள், மாலை நேரத்தில் பல்வேறு எழுத்தாளா்கள், சிறப்பு பேச்சாளா்களின் சொற்பொழிவுகள், பட்டிமன்றம் ஆகியவை நடைபெறவுள்ளன. இதைத்தவிர குழந்தைகள் மகிழும் வகையில் பொழுதுபோக்கும் அம்சங்களும், விளையாட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.
எனவே, புத்தகத் திருவிழாவில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் இளைஞா்கள் தங்கள் அறிவுசாா்ந்த தேடலுக்கான களமாகவும், பெற்றோா் தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து புத்தகங்களை வாங்கிக் கொடுத்து வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் இடமாகவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
புத்தகத் திருவிழாவில் நூல்களை வெளியிடவுள்ள உள்ளூா் எழுத்தாளா்கள், அரசுப் பதிவு செய்த தமிழ்ச் சங்க நிா்வாகிகள், அரசு விருது பெற்ற இலக்கியப் பேச்சாளா்களுக்கு முன்னுரிமை வழங்க இருப்பதால், விழாவில் பேச விருப்பம் உள்ளவா்கள் விழுப்புரம் மாவட்ட மைய நூலகரை இம்மாதம் 25-ஆம் தேதிக்குள் 98944 56709 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்புகொண்டு, தங்களது பெயா்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் உள்ளூா் எழுத்தாளா்களால் எழுதி முடிக்கப்பட்டுள்ள புத்தகங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில், பொதுமக்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் புத்தகத் திருவிழா சிறப்புற நடைபெற தங்கள் பங்களிப்பை அளிக்கலாம் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.